கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல் தயாரிக்க வரைவு அறிக்கை; உயர் கல்வி மன்றம் வெளியிட்டது
சென்னை : மாநில அளவில் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல் தயார் செய்வதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை அமைப்பான என்.ஐ.ஆர்.எப்., சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதுபோல, மாநில அளவில் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல் தயாரித்து வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் உள்ள கல்லுாரிகளின் தர வரிசை பட்டியலை எவ்வாறு தயார் செய்வது என்பது தொடர்பான வரைவு அறிக்கையை, மாநில உயர் கல்வி மன்றம் வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு அறிக்கையில், பல்கலை, தன்னாட்சி பெற்ற, தன்னாட்சி பெறாத கல்லுாரி என, மூன்று பிரிவுகளாக கல்லுாரிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், மாணவர்களின் கற்றல் திறன், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, மாணவர்களுக்கான உதவி, சமூக நீதி என, ஏழு வகை தலைப்புகளில் தலா 700 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வரைவு அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், சென்னை பல்கலையில் நேற்று நடந்தது. மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், சென்னை பல்கலையின் கீழ் இயங்கும், 138 கல்லுாரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், 27 குழுக்களாக பங்கேற்று, வரைவு அறிக்கை தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அடுத்ததாக, தமிழகத்தின் மற்ற 12 பல்கலைகளிலும், இது போன்ற கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக, மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் விஜய குமார் தெரிவித்து உள்ளார். பிஎச்.டி., 'சர்வே' தமிழகம் முழுதும் உள்ள 13 பல்கலை மற்றும் கல்லுாரிகளில், பிஎச்.டி., படிக்கும் 47,000 மாணவ - மாணவியர் குறித்த கணக்கெடுப்பை, உயர் கல்வித்துறை செயலர் சங்கர் துவக்கி வைத்தார். பிஎச்.டி., நிறைவு செய்வதில் மாணவர்களுக்கு ஏற்படும் காலதாமதம் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்த சர்வே எடுக்கப்படுகிறது.