மதுரை : ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கும், அனைத்து தொழில் துறைகளும் பாதுகாக்கப்படும். அரசியல் தலையீடு இன்றி ஆட்சி செயல்படும்,'' என, மதுரையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த அனைத்து சங்க பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் அதன் பொது செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார்.
மதுரை மாவட்டத்தில் இருந்து விவசாயம், உணவுப்பொருட்கள், வர்த்தகம் உட்பட 87 சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லுார் ராஜூ, உதயகுமார், காமராஜ் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரைக்கான தேவைகள் குறித்து பிரதிநிதிகள் பேசியதாவது:
ஜெகதீசன், தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்: பிற மாநிலங்களில் 2 தலைநகரங்கள் இருப்பது போல தமிழகத்தில் மதுரையை 2வது தலைநகராக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. அதை அடுத்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். கோடீஸ்வரன், தலைவர், மடீட்சியா: கொரோனா தொற்றுக்குப் பின் 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் (எம்.எஸ்.எம்.இ.,) தொழில்கள் அழிந்து விட்டன. எம்.எஸ்.எம்.இ., நிறுவன மின்கட்டண அதிகரிப்பு பிரச்னையை சரிசெய்ய வேண்டும். ஜெயப்பிரகாசம், கவுரவ ஆலோசகர், தமிழ்நாடு உணவுப்பொருட்கள் வியாபாரிகள் சங்கம்: ஜி.எஸ்.டி., வரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை சட்டம், பிளாஸ்டிக் தடை சட்டங்கள் மூன்றும் மத்திய அரசு சார்ந்தது. அ.தி.மு.க., மூலம் மூன்று சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ரகுநாதராஜா, தலைவர், கப்பலுார் தொழிலதிபர் சங்கம்: அ.தி.மு.க., ஆட்சி இருந்த வரை கப்பலுார் டோல்கேட்டில் எங்களுக்கு தொந்தரவு இல்லை. இந்த நான்கரை ஆண்டுகளாக எங்களுக்கு யாரும் ஆதரவு தரவில்லை. கப்பலுாரில் துணைமின்நிலையம் அமைக்கவும் முயற்சிக்கவில்லை. ராமன், கவுரவ தலைவர், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு : ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கத்தை 142 அடி வரை தேக்க உச்சநீதிமன்றத்தின் மூலம் ஆணை பெற்றார். தற்போதைய தி.மு.க., ஆட்சியில் 136 அடி உயரம் கூட தண்ணீரை தேக்காமல் வெளியேற்றுகின்றனர். தமிழக நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் விவசாயிகள் விரோத அரசாக தி.மு.க., செயல்படுகிறது. குமார், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்: அ.தி.மு.க., ஆட்சியில் ஓட்டல்கள், தொழில்களை நிம்மதியாக நடத்தினோம். 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இரவு 11:00 மணிக்கே கடைகளை மூடச்சொல்லி போலீசார் துன்புறுத்துகின்றனர். ரவுடிகள், சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் தாக்குகின்றனர். நாகராஜ், முன்னாள் தலைவர், சி.ஐ.ஐ.,: மதுரையை மையமாக வைத்து ரப்பர் தொழில்கள், ஐ.டி., ஜவுளித் தொழில்களுக்கான கிளஸ்டரை உருவாக்க வேண்டும். சுற்றுலா, கலாசாரம் உள்ளடக்கிய மதுரை தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க வேண்டும். கிருஷ்ணமூர்த்தி, செயலாளர், எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கம்: எதற்கெடுத்தாலும் செஸ் வரி விதிக்கின்றனர். அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு பொருட்களை கொண்டு சென்றால் மட்டுமே ஒரு சதவீத செஸ் வரிவசூலிக்க வேண்டும். இதை அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் உறுதி செய்ய வேண்டும். அழகு, தலைவர், நோட்டு புத்தகங்கள் தயாரிப்பாளர் சங்கம்: தற்போது பிரிண்டிங் வகை நோட்டுகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. அனைத்து நோட்டு புத்தகங்களுக்கும் காகித தயாரிப்பு என்ற அடிப்படையில் 5 சதவீத வரியாக குறைக்க வேண்டும். செல்வம், துணைத்தலைவர், பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் சொத்துவரி கடுமையாக உயர்ந்தது. ஆண்டுதோறும் 6 சதவீதம் அளவு வரி அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். அபரிமிதமான மின்கட்டணத்தால் குறு, சிறுதொழில்கள் நசிந்து வருகின்றன. சம்பத், செயற்குழு உறுப்பினர், டான்ஸ்டியா: ஐந்து சதவீதத்திற்கும் குறைவான தொழில்களே தொழிற்பேட்டையில் உள்ளன. அனைத்து சான்றிதழ்களும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். ரத்தினவேலு, தலைவர், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம்: பொழுதுபோக்கு, மருத்துவம், ஆன்மிகம், வர்த்தகம், சுற்றுலாவை உள்ளடக்கிய மதுரை விமான நிலையத்தை 'ஏசியான்' சுற்றுலா நகரங்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இணைக்க மத்திய அரசிடம் பேச வேண்டும். விளைபொருட்களை மதிப்பு கூட்டும் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வால் தொழில் துறையில் முன்னேற்றம் இல்லை. இவ்வாறு அவர்கள் பேசினர்.