நாகர்கோவில் : ''வரும் ஆண்டுகளில் டிசம்பர் இறுதி வாரம் திருவள்ளுவர் வாரமாக கொண்டாடப்படும்,'' என, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.முதல்வர் மேலும் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த திருவள்ளுவர் சிலைக்கு, திராவிட மாடல் ஆட்சியில் வெள்ளி விழா நடத்துவதில் பெருமை கொள்கிறேன். இச்சிலையை திறந்து வைக்கும் போது கருணாநிதி தன் உடல் நடுங்குவதாகக் கூறினார். ஐம்பெரும் விழா
அந்தளவுக்கு அவர் உணர்ச்சிப் பெருக்கில் இருந்தார். வான்புகழ் புலவருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்ற நெடுங்கனவு நனவாகும் மகிழ்ச்சியில் அவருக்கு அந்த உணர்வு ஏற்பட்டது.நமக்கு இப்படி ஒரு பெருமையை, வரலாற்று வாய்ப்பை உருவாக்கித் தந்துவிட்டு போயிருக்கிறார் கருணாநிதி. தமிழகத்திற்கும், தமிழுக்கும் அவர் உருவாக்கித் தந்த சொத்துக்கள் ஏராளம். அறவழியில் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் உழைக்க வேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் கனவாக உள்ளது.திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகி விட்டது என்று கூறியபோது, பெரிய விழாவாக நடத்த வேண்டும் என்று கூறியபோது சிலர் எதற்காக விழா நடத்த வேண்டும் என, கேட்டனர். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது. ஆனால், உள் அர்த்தம் உண்டு. திருவள்ளுவர் தமிழர்களுக்கு மிகப்பெரிய உலக அடையாளம். திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம்; கொண்டாடுவோம்; கொண்டாடிக் கொண்டே இருப்போம்.திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா, திருவள்ளுவர்- விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி இழை பால திறப்பு விழா, வெள்ளி விழா மலர் வெளியீடு, திருக்குறள் கண்காட்சி, அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழாவாக இது நடந்துள்ளது.கருணாநிதி திருக்குறள் தலைவராகவே வாழ்ந்தார். வலம் வந்தார். கருணாநிதி பள்ளி சிறுவனாக இருந்தபோது முதன்முதலாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்கையில், நட்பு என்ற தலைப்பில் பேசியபோதும், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். அப்போதிலிருந்து குறள் ஆசான் வள்ளுவருக்கும், தமிழ் குரலோன் கருணாநிதிக்கும் வாழ்நாள் முழுதும் நட்பு இருந்தது. வள்ளுவத்தை போற்றும் தொண்டு இருந்தது. சிறப்பு பயிற்சி
தி.மு.க., ஆட்சி வருவதற்கு முன்பே சட்டசபையில் வாதாடி திருவள்ளுவர் படத்தை திறக்க வைத்தவர் கருணாநிதி. போக்குவரத்துத்துறை அமைச்சரானதும் எல்லா போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் திருக்குறளை எழுத வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து அரசு விடுதிகளிலும் திருவள்ளுவர் படம் அமைத்து திருக்குறளும் எழுதினார்.மயிலாப்பூரில் திருவள்ளுவர் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் திருவள்ளுவர் கோட்டம், குறளோவியம் தீட்டினார். திருக்குறள் உரை இயற்றினார். இப்படி திருக்குறளாகவே வாழ்ந்தார். இந்த சிலை சாதாரணமாக வைக்கப்படவில்லை; இதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது.வான்புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என, 1975 டிச., 31ல் அமைச்சரவையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றினார். 1990ல் சிலைக்கான பணிகள் துவங்கப்பட்டன. தொடர்ந்து தடைகள் ஏற்பட்டன. 1997ல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கோட்டம், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அமைத்த கணபதி ஸ்தபதி தான் திருவள்ளுவர் சிலை அமைக்கும் கருணாநிதியின் கனவை நனவாக்கினார். கணபதி ஸ்தபதியின் தந்தை தான் சென்னையில் காந்தி மண்டபத்தை அமைத்தார்.133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பொருளும் இன்பமாக 95 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் துாக்கி முடிந்த கொண்டையை மகுடமாகக் கொண்டு, இடுப்பில் பட்டாடையும், மார்பின் மேல் துண்டும், வலது கையானது அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலை காட்டும் விதம் மூன்று விரல்களாகவும் இடது கையில் ஓலைச்சுவடிகள் இருப்பது போன்றும் அமர்ந்திருக்கிறார்.70,000 டன் எடை கொண்ட இந்த சிலை, 3,681 கற்களால் அமைந்துள்ளது. இந்த கற்களைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கி, அதை ஒரு பாறையில் துாக்கி நிறுத்தி வைத்திருப்பது தான் சிலையின் பெருமை. 133 அடி உயரச் சிலை அமைக்க, 180 அடிக்கு சாரம் கட்டிச் சிலை அமைத்தனர். 500 சிற்பிகள் இதில் ஈடுபட்டனர். தஞ்சை பேரரசன் ராஜராஜசோழன் அன்று கண்ட சிற்பக்கலை மரபை, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியிடம் காண்கிறேன் என, கணபதி ஸ்தபதி கூறினார்.திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். நல்வாழ்த்துக்கள்
படகு தளத்திலிருந்து சுற்றுலா பயணியர் திருவள்ளுவர் சிலையை சென்றடைய மூன்று புதிய பயணியர் படகு வாங்கப்படும். அவற்றுக்கு காமராஜர், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய மார்ஷல் நேசமணி, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பெயர் சூட்டப்படும்.ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் பயிலரங்கம், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.ஆண்டுக்கு, 133 உயர்கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கியம் சார்ந்த போட்டிகள் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாகக் கொண்டாடப்படும்.தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு திருக்குறள் மாணவர் மாநாடு நடத்தப்படும். திருக்குறள் உரை அரசு அலுவலகங்களில் எழுதுவது போன்று தனியார் அலுவலகங்களிலும் எழுத ஊக்குவிக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.வானுயர் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். திருவள்ளுவர் சிலை வெறும் சிலை அல்ல. திருக்குறள் வெறும் நுால் அல்ல. நம் வாழ்க்கைக்கான வாழும் கேடயம். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல; காவிச்சாயம் பூச நினைக்கும் தீய எண்ணங்களையும் விரட்டி அடிக்கும். தனிமனிதன் முதல் அரசு வரைக்கும் நாம் செய்ய வேண்டியது பள்ளிகளில், கல்லுாரிகளில் அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் அதிகமாக பரவச் செய்ய வேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டுமல்ல; தனியார் நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழர் பொங்கல் நல்வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பலம் அடிகள் பேசினர். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பெரியசாமி, நேரு, சுப்பிரமணியன், பொன்முடி, டி.ஆர்.பி.ராஜா, சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியகருப்பன், அன்பரசன், கீதா ஜீவன், சாமிநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.