காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்தது 13 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை:'தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து திசை மாறியதால், 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில், 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டத்தில் தலைஞாயிறு, 15; வேளாங்கண்ணி, 13; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், 12; சென்னை கொளத்துார், மாதவரம், அம்பத்துார் பகுதிகளில் தலா, 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு படிப்படியாக வலு குறைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவலாம். இதனால், தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம். தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. எனினும், இதன் மேக கூட்டம், தமிழகம் முழுதும் பரவி காணப்படுவதால், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த அமைப்பு மேலும் வலுகுறைந்து, மேற்கு திசையில் மெல்ல நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் காணப்படும், ஈரப்பத குவிதல் காரணமாக, தற்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து, நாளை மறுதினம் வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது உருவான பிறகு, எந்த திசையில் நகரும் என்பது தெரியவரும். தமிழகம், புதுச்சேரியில், வடகிழக்கு பருவமழை காலத்தில், தற்போது வரை ஒட்டுமொத்த சராரியாக, 46 செ.மீ., மழை பெய்துள்ளது, இந்த காலத்தில் இயல்பான மழை அளவு, 41 செ.மீ., ஆகும். தற்போது இயல்பைவிட, 16 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.