உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயல் விவகாரத்தில் விலகியது மர்மம்

வேங்கைவயல் விவகாரத்தில் விலகியது மர்மம்

சென்னை : வேங்கைவயல் விவகாரத்தில், இரண்டு ஆண்டுகளாக நீடித்த மர்மம் விலகியது. ஆதிதிராவிட மக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில், மனிதக்கழிவு கலந்தது தொடர்பான வழக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டியுள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில், நான்கு நாட்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில், 2022 டிசம்பரில் ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை

இதுதொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ், வெள்ளனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.கண்துடைப்பாக விசாரணை உள்ளதாகவும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரியும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கமல், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க் ரவீந்திரன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மற்றும் வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோர், 'சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை' என்றனர்.உடன், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதாடியதாவது:வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை முடிந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, 32, சுதர்சன், 20 மற்றும் முத்துகிருஷ்ணன், 22, ஆகியோருக்கு எதிராக, கடந்த 20ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, புகைப்படங்கள், வீடியோக்கள், தடய அறிவியல் துறை மற்றும் மருத்துவ அறிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே, விசாரணை அதிகாரியால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை

சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா என்பவர், குடிநீர் தொட்டி ஆப்பரேட்டரான சண்முகத்தை பணிநீக்கம் செய்துள்ளார்.இதில் ஏற்பட்ட பிரச்னையில், பஞ்சாயத்து தலைவரின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொய்யான தகவலை முரளிராஜா பரப்பியுள்ளார். இதையடுத்து, முத்து கிருஷ்ணனும், சுதர்சனும் குடிநீர் தொட்டியில் ஏறிச்சென்று பார்ப்பது போல, இந்தக் குற்றத்தை செய்துள்ளனர்.இவ்வாறு அவர் வாதாடினார்.மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையையும் தாக்கல் செய்தார். அதற்கு, மனுதாரர்கள் தரப்பில், 'சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சி.பி.சி.ஐ.டி., தரப்பில் அவகாசம் கோரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எப்போது தாக்கல் செய்யப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை' என்றனர்.இதைக் கேட்ட, 'முதல் பெஞ்ச்' வழக்கை பிற்பகல் தள்ளிவைப்பதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா என, மனுதாரர்கள் சரிபார்த்து வருமாறும் அறிவுறுத்தனர். இதையடுத்து, பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி வாதாடியதாவது:இந்த வழக்கையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில், குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது தொடர்பாக, புகார் அளித்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது, தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல. உண்மையில் குடிநீர் தொட்டி ஆப்பரேட்டரான மாற்று சமூகத்தைச் சேர்ந்த சண்முகத்தை பணிநீக்கம் செய்ததற்கு, வேங்கைவயல் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பஞ்சாயத்து தலைவரின் கணவரின் துாண்டுதலில்தான், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், சி,பி.சி.ஐ.டி., போலீசார் முறையாக விசாரணை செய்யவில்லை. ஒருநபர் ஆணையமும் இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.எனவே, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும்.இவ்வாறு அவர் வாதாடினார்.இதைக் கேட்ட நீதிபதிகள், 'சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இவ்விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. குற்றப்பத்திரிகையில் அதிருப்தி இருந்தால், சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசு அறிக்கைக்கு, வரும் மார்ச் 10ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்; விசாரணையை மார்ச் 27க்கு தள்ளி வைத்தனர்.

சி.பி.ஐ., வசம் ஒப்படையுங்கள்

ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக, தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பர் என்று சி.பி.சி.ஐ.டி., குறிப்பிட்டுள்ளது. இது, எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நிர்ப்பந்தம் காரணமாக, பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல. எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில், உண்மை குற்றவாளிகளை கண்டறிய, இவ்வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.- சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர்

குற்றவாளிகள் யார்?

இவ்வழக்கில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது, ஏற்கத்தக்கதாக இல்லை. காவல் துறையின் குற்றப்பத்திரிக்கையை, விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில், பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக காவல் துறை நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு ஆண்டுகளாக, குற்றவாளிகளை அடையாளம் காண்பதில், சி.பி.சி.ஐ.டி., மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் கடுமையாக அறிவுறுத்திய பின்னும், குற்றவாளிகள் யார் என கூறவில்லை.இந்த வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கேட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்படுமோ என்ற சந்தேகத்தில், அதை தடுப்பதற்காகவே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கோடு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழக அரசே முன்வந்து, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.திருமாவளவன்விடுதலை சிறுத்தைகள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

venugopal s
ஜன 25, 2025 21:44

2002 குஜராத் கலவர வழக்கு ஆனது போல் ஆகி விடும் போல் உள்ளதே!


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 25, 2025 23:14

குஜராத் கலவரம் போலல்லாமல் எறும்பு சீனியை தின்னுடிச்சி கரையான் சாக்கை தின்னுடிச்சி... கூவத்தை சுத்தம் செய்ய ஒதுக்கிய பணத்தை முதலைகளை பிடிக்க செலவானது அரிசி குடோனில் ஏற்றி இறக்கும் போது சிந்திய வகையில் அரிசியின் மதிப்பு ரூ.1900கோடி என்ற கணக்கின்படி வேங்கை வயல் வழக்கு ஆகிவிடுமோ ....பயமாக இருக்கிறது....!!!


Rengaraj
ஜன 25, 2025 16:55

அரசு தலித் சமூகத்தை அவமதித்திருக்கிறது என்று சொன்னால் திருமா அந்த சமூகத்துக்கு செய்திருப்பது பச்சை துரோகம். அரசுக்கு இத்தனை நாட்கள் போதிய அழுத்தம் தராமல் வழக்கை இழுத்தடிக்க இவரும் மறைமுகமாக ஒரு காரணம். இவரால் தோழமை சுட்டல் என்று நாடகம் நடத்தத்தான் முடிகிறது . நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இதை ஒரு பிரச்சனையாக பேச மட்டுமே செய்தார்கள். விசாரணையில் போதிய முன்னேற்றம் இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு ஆதரவாக ஒரு விசாரணையை கூட வேகமாக செயல்பட , முடுக்கிவிட துணிச்சல் இல்லையென்றால் திருமா செய்திருப்பது துரோகம் அன்றி வேறு என்ன ? இனிமேலும் அவர் அந்த கூட்டணியில் நீடித்திருப்பது மிக மிக வெட்கக்கேடான செயல்.


ராமகிருஷ்ணன்
ஜன 25, 2025 14:27

இத்தனை நாள் என்னத்த ஆராய்ச்சி பன்னிங்க. தாமதமாக சொல்வதால் அரசின் மேல் நம்பிக்கை போய்விட்டது. CBI க்கு போக மறுப்பது ஏன். சம்பந்தப்பட்ட நபர்கள் திமுகவினரா


kantharvan
ஜன 25, 2025 13:47

உங்கள் இணம்தானே அப்படித்தானே இருக்கும்.


SIVA
ஜன 25, 2025 13:40

இது தாண்டா தவிட்டு திராவிட மாடல் சமூக நீதி பாதிக்க பட்ட மக்களை குற்றவாளி ஆக்கி கேஸ் முடிக்கின்றோம் , நாளை யாராவது வீட்டில் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று கம்பளைண்ட் கொடுத்தால் அவர்கள் தான் திருடினார்கள் இல்லை அவர்கள் தான் திருட சொன்னார்கள் என்று வழக்கை முடித்து விடலாம் , வாழ்க தவிட்டு திராவிட மாடல் ....


Rengaraj
ஜன 25, 2025 13:28

எனெக்கென்னமோ குற்றவாளிகள் யார் என்ற விஷயம் முதல்வருக்கும் திருமாவுக்கும் முன்னாலேயே தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது. நாடாளு மன்ற தேர்தல் சமயத்தில் சொன்னால் எங்கே தங்களுக்கு கிடைக்கவேண்டிய தலித் சமூக வோட்டு பாதிக்கப்படுமோ என்பதால் , தற்போது வழக்கில் மர்மம் விலகியது போன்று விஷயத்தை வெளியில் சொல்லியிருக்கிறார்கள். திருமாவும் தேர்தல் சமயத்தில் இந்த விஷயத்தை பெரிது படுத்தினால் கூட்டணி பிரச்சினை ஏற்படலாம் , எம்.பி சீட் கிடைக்காமல் போனால் எனா செய்வது என்தற்காகவும் சீட் பேரத்திற்க்காகவும் அடக்கி வாசித்திருக்கலாம்.


indian
ஜன 25, 2025 13:11

மக்களை திசை திருப்ப வேங்கை வயல் மற்றும் திருப்பரங்குன்றம் விஷயம் கையில் எட்டுகபட்டுள்ளது. மக்கள் ஏமாற கூடாது.


R.PERUMALRAJA
ஜன 25, 2025 12:59

இரெண்டு ஆண்டிற்கு பணம் கொடுத்து , பணத்துக்காக குற்றவாளியாக ஒப்புக்கொள்ள செய்ததை கூட ஏதோ சாதித்ததை போல இந்த அரசு அதன் சாதனை பட்டியலில் சேர்த்து கொள்ளும் .


R.PERUMALRAJA
ஜன 25, 2025 12:56

வேங்கைவெயிலிருக்கு விஜய் செல்லப்போகிறார் என்றவுடன் சட்டு புட்டு என்று வேங்கைவெயில் பிரச்சனையை மூட பார்க்கிறார்கள் , அதுவும் இரெண்டு வருடங்களுக்கு பிறகு . 1000 ருபாய் காசு கொடுத்தால் ஒட்டு என்னும் மனநிலையில் உள்ளவர்களிடம் 10000 ரூபாய் காசு கொடுத்து தங்களை குற்றவாளியாக குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள் . 23 ஆம் புலிகேசியின் ஆட்கள் .


R.PERUMALRAJA
ஜன 25, 2025 12:51

வேங்கைவயல் , அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் பிரச்னை போன்று நாட்டில் எத்தனையோ அனல் பறக்கும் பிரச்சனைகளை இருக்க , அவற்றையெல்லாம் திசை திருப்ப " பெரியார் " என்னும் உப்பு சப்பு இல்லாத பிரச்சனையை இன்றைய தி மு க மறைமுகமாக கிளப்பி கொண்டு இருக்கிறது , சீமான் போன்றோர் சிந்திக்காமல் " பெரியார் பெரியார் "என்று தேவை இல்லாத பிரச்சனைகளை பொதுவெளியில் சப்தமிட்டு கொண்டுஇருக்கிறார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை