அரசு டாக்டரை சரமாரியாக குத்திய வாலிபர் கைது
சென்னை: கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு டாக்டர் ஏழு முறை கத்தியால் குத்தப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் டாக்டர் நலமுடன் இருக்கிறார். அவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை புது பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் பிரேமா, 51. இவர் வயிற்று வலியால் கிண்டி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு கேன்சர் இருப்பதாக கண்டறிந்து சிகிச்சை அளித்துள்ளனர். நீண்ட சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். வாக்குவாதம்
மீண்டும் வலி வந்ததால், ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், கிண்டி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால், நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறினர்.பிரேமாவின் மகன் விக்னேஷ், 25, கிண்டி மருத்துவமனைக்கு சென்று, தாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் பாலாஜியை சந்தித்து கோபமாக விசாரித்துள்ளார். வாக்குவாதம் நடந்து, விக்னேஷ் கீழே விழுந்துள்ளார். ஆத்திரம் அடைந்து, பையில் எடுத்து வந்த கத்தியால் டாக்டரை குத்தியிருக்கிறார். ஏழு இடங்களில் குத்தப்பட்டு ரத்தம் கொட்ட டாக்டர் கீழே சரிந்தார். தீவிர கண்காணிப்பு
விக்னேஷ் சகஜமாக நடந்து வெளியே போயிருக்கிறார். இதற்குள் விஷயம் தெரிந்து ஊழியர்கள் டாக்டரை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல, மற்ற ஊழியர்களும், சில டாக்டர்களும் விக்னேஷை மடக்கி பிடித்து அடித்து, உதைத்தனர். கிண்டி போலீசார் வந்து ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்றனர்.டாக்டர் பாலாஜிக்கு இதய துடிப்பை சீராக்கும், 'பேஸ்மேக்கர்' கருவி ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது. கத்திக் குத்து காரணமாக அதிக ரத்தம் வெளியேறி உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார்.இந்த சம்பவத்தை கண்டித்து, அவசர சிகிச்சையை தவிர, மற்ற சேவைகளை புறக்கணித்து, மருத்துவமனை வாசலில் தரையில் அமர்ந்து டாக்டர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். துணை முதல்வர் உதய நிதி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் சுப்ரியா சாஹு ஆகியோர் வந்து டாக்டர் பாலாஜியை பார்த்தனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் அமைச்சர் பேசி சமாதானம் செய்தார். செய்தி பரவியதும், கோவை, மதுரை உள்ளிட்ட தொடர்ச்சி 14ம் பக்கம்அரசு டாக்டரை...முதல் பக்கத் தொடர்ச்சிபெரிய நகரங்களின் அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்து, டாக்டர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கும் என உறுதி சொன்னார். கடும் நடவடிக்கை எடுப்போம் என உதயநிதி பேட்டி அளித்தார். அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்தனர். போலீஸ் கமிஷனர் அருண் வந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.சம்பவம் குறித்து, கிண்டி போலீசார் கூறியதாவது:தவறான சிகிச்சை அளித்ததாக ஒரு மாதம் முன்பே டாக்டரிடம் விக்னேஷ் சண்டை போட்டிருக்கிறார். முரையாக பதில் சொல்லவில்லை என்ற கோபத்தில், வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை மறைத்து எடுத்து வந்து, நேற்று டாக்டரிடம் தகராறு செய்துள்ளார். டாக்டர் தள்ளி விட்டதால், ஆத்திரப்பட்டு கத்தியால் குத்தியதாக சொல்கிறார். விக்னேஷ் வீட்டில் சோதனை செய்து, அவரை பற்றிய தகவல் சேகரித்தோம். டிப்ளமோ படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார். அவருடைய அம்மாவின் மருத்துவ ஆவணங்களை எடுத்து வந்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.டாக்டர் மீது நோயாளி புகார்விக்னேஷ் தாய் பிரேமாவை செய்தியாளர்கள் சந்தித்தபோது, டாக்டர் பாலாஜி மீது புகார் சொன்னார். ''அவர் எப்போதும் பிசியாக இருப்பார். என் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார். சொன்னால் புரியுமா என்று கேட்பார். 'ஸ்கேன்' எடுக்க சொல்வார்; ஆனால் ஸ்கேன் ரிப்போட்டை பார்க்க மாட்டார்.''டாக்டரை என் மகன் தாக்கியதை சரியென்று சொல்ல மாட்டேன். ஆனால், எனக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு அவர்தான் காரணம் என்று நம்பி, என் மீதான பாசத்தில் அப்படி செய்துவிட்டான்,'' என்றார்.'சர்வதேச தரத்தில் சிகிச்சை'கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி கூறியதாவது:பிரேமா புற்றுநோய் முற்றிய நிலையில் தான், மருத்துமவனைக்கு வந்தார். சர்வதேச தரத்திலான சிகிச்சை அளித்தோம். புற்றுநோயின் 5வது கட்டம் என்பதால், அவரை காப்பாற்றுவது கடினம். இருக்கும் வரை, வலி இல்லாமல் வாழ தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கேன்சர் பரவி இருந்ததால் நுரையீரல் பகுதி அகற்றப்பட்டது. சிகிச்சையில் தவறும் இல்லை, தாமதமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.