உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 159 கிராமங்களில் மயானம் இல்லை உடல்கள் சாலையோரம் அடக்கம்

159 கிராமங்களில் மயானம் இல்லை உடல்கள் சாலையோரம் அடக்கம்

சென்னை:தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், அருந்ததியர் சமூகத்தினர் வசிக்கும் 159 கிராமங்களில் மயான வசதி இல்லாததால், இறந்தவர்களை சாலையோரம் அடக்கம் செய்யும் சூழல் உள்ளது. திண்டுக்கல், தேனி, கரூர், விழுப்புரம், திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் 159 கிராமங்களில், மயான வசதி இல்லாத நிலை உள்ளது. அவ்வாறு மயானம் இருந்தாலும், அங்கு செல்ல உரிய சாலை வசதி இல்லை. வன்முறை இதனால், அப்பகுதி மக்கள், சாலையோரம், ஏரி, குளம் என, ஊருக்கு ஒதுக்குபுறமாக உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர் என, தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து, தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா கூறியதாவது: தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஆனால், இறந்தவர்களை சுடுகாட்டில் அடக்கம் செய்ய, பிற சமூகத்தினர் அனுமதி மறுப்பது வேதனையாக உள்ளது. திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீரளூர் கிராமத்தில், பொது வழியில் தலித் உடலை எடுத்துச் செல்ல மறுத்த மாற்று சமூகத்தினர், 360 அருந்ததியரின் வீடுகளை தாக்கினர். இன்றும் பல மாவட்டங்களில் அதே நிலை தான் உள்ளது. திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மட்டும், 159 கிராமங்களில் அருந்ததியர் சமூகத்தினருக்கு என மயான வசதி இல்லை. இதனால், இறந்தவர்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏரி, சாலையோரங்களில் புதைத்து வருகின்றனர். உரிய வசதி இப்பிரச்னை குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முதல் ஆணையர் வரை, பல முறை புகார் மனு அளித்தும், எந்த பயனும் இல்லை. எனவே, முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, அருந்ததியர் சமூகத்தினருக்கு உரிய மயான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமத்துவ மயானம் திட்டத்தைப் போல, கிராமப்புறங்களில் எஸ்.சி., உள்ளிட்ட இதர பிரிவினருக்கான பொது மயான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'அதற்கு மாவட்ட வாரியாக கலெக்டரின் மேற்பார்வையில் நிலம் பார்க்கப்பட்டு, உரிய வசதி செய்து தரப்படுகிறது. இதை, பட்டியல் உள்ளிட்ட இதர பிரிவினர் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !