நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்: பன்னீர்
மதுரை: ' ' அ.தி.மு.க., ஒன்றிணைவதற்கு முழு ஒத்துழைப்பு தருவேன்,'' என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, எந்த ரூபத்தில், எப்படிப்பட்ட முயற்சிகள் வந்தாலும், அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். அதற்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். அ.தி.மு.க., ஒன்றிணைந்தால்தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என நினைக்கும் அனைவரது கருத்தும் வரவேற்கக் கூடியது. அந்த எண்ணம் தான், அனைவரின் மத்தியிலும் உள்ளது. கட்சி ஒன்றிணைந்தால்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் எண்ணம் நிறைவேறும். இதில் மாறுபட்டு நிற்பதற்கான காரணம் என்னவென்று பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். பழனிசாமியை தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், மீண்டும் கூட்டணிக்கு வருவேன் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியது ஆழமா ன கருத்து. என்னைப் பொறுத்தவரை கட்சி ஒன்றிணைவதற்கு எந்தவித ' டிமாண்டும்' நான் வைக்கவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா என கேட்கின்றனர். அது தொடர்பாக, பேச வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன; ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை எல்லாம் நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம் . கட்சியை ஒருங்கிணைப்பதற்காக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்திருக்கும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும். அவரிடம் தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.