மேலும் செய்திகள்
ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை
17-Dec-2024
சென்னை:''ஈ.வெ.ராமசாமியை எதிர்த்து கொண்டே, அம்பேத்கர் போன்றவர்களை தன்வசப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், ஈ.வெ.ரா.,வுக்கு எதிரான அவதுாறுகள் பெருமளவில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. ஈ.வெ.ரா.,வின் ஜாதி ஒழிப்பு கருத்தியலில், சமூக நீதி அரசியலில் உடன்பாடில்லாத சனாதன சங் பரிவாரங்கள், இப்பரப்புரையை செய்து வருகின்றன. தமிழக அரசியலில், அவர்களால் காலுான்ற முடியாதது முதன்மையான காரணமாக உள்ளது.இங்கு அவர்கள் வேரூன்றுவதற்கு பெரும் தடையாக இருப்பது, ஈ.வெ.ரா.,வின் சமத்துவ சிந்தனைகள் தான் என்பதால், அவரின் நன்மதிப்பை நொறுக்க, கிரிமினல் உத்தியை கையாண்டு, அவர் மீது ஆதாரமில்லாத அவதுாறுகளை பரப்புகின்றனர்.மேலும், ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை பேசும் இயக்கங்களை குறிவைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக அரசியலில் தொடர்ந்து பதற்றத்தையும், குழப்பங்களையும் உருவாக்கி, அமைதி சூழலை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இதுபோன்ற சதி வேலைகளில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஈடுபடுகின்றனர். ஜாதி, மதம், மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின் ஒளிந்து, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு, 'பாசிச' அரசியல் சதியை முறியடிக்க வேண்டும்.கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகத்தை கைப்பற்றி விடலாம் என, கனவு கண்டவர்கள், அக்கனவு நிறைவேறாததால், திராவிட கட்சிகளுள் ஒன்றான அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தி, தங்களை இரண்டாவது கட்சியாக நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.மேலும், ஆளும் தி.மு.க., கூட்டணியை, 2026ல் வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுகின்றனர். அதனால் தான், பல்முனை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தமிழகத்திற்கு நிதி தராதது, மாநில உரிமை பறிப்பது, கவர்னர் வாயிலாக அரசை செயல்பட விடாமல் முடக்குவது போன்ற நெருக்கடிகளை அளித்து வருகின்றனர்.ஜாதி ஒழிப்பே, ஈ.வெ.ராமசாமியின் சிந்தனைகளின் அடிப்படை. இது தான், ஈ.வெ.ரா.,வையும், அம்பேத்கரையும் ஒருங்கிணைக்கும் கருத்தியல் புள்ளி. அத்தகைய ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனையை முன்னிறுத்தி இறுதி மூச்சு வரை தீவிரமாக களமாடிய ஈ.வெ.ரா.,வை, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஒருபுறம் ஈ.வெ.ரா.,வை எதிர்த்து அவதுாறு செய்து கொண்டே, மற்றொருபுறம் அவரைப் போலவே சனாதானத்தை எதிர்த்து போராடிய அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோரை தங்களுக்கானவர்கள் என, தம்வயப்படுத்த முயற்சிக்கின்றனர். இவை மக்களை ஏமாளிகளாக்கும் சூழ்ச்சி மற்றும் சனாதன ஆதிக்கத்திற்கு அனைத்து கதவுகளையும் திறந்து விடும் துரோகம். இவர்களை அடையாளம் கண்டு அம்பல்படுத்துவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா., குறித்து தவறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இரு தினங்களுக்கு முன், கடலுார் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பாலியல் உறவு பற்றி ஈ.வெ.ரா., கொச்சையாக கூறி இருப்பதாக தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சீமானுக்கு எதிராக, த.பெ.தி.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஈ.வெ.ராவை அவதுாறு செய்த சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தி.மு.க., சட்டத்துறை துணைச் செயலர் மருது கணேஷ் புகார் அளித்துள்ளார்.அதேபோல, கடலுார், மதுரை, சேலம், திருநெல்வேலி, சிவகங்கை, தென்காசி, திண்டுக்கல் என, பல மாவட்டங்களில், தி.மு.க., மற்றும் த.பெ.தி.க., உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சீமான் மீது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், கலவரத்தை துாண்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ***
17-Dec-2024