கவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு; முதல்வரிடம் திருமா வலியுறுத்தல்
சென்னை ; ''ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு, உரிய பாதுகாப்பு வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார். நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட, கவின் தந்தை சந்திரசேகர், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனுடன், தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். சந்திப்பு குறித்து திருமாவளவன் கூறியதாவது: கவின் தந்தை, முதல்வரை சந்தித்தார். அப்போது, 'தனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலையில் கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளது. தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். 'யாரும் தப்பி விடாமல், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய மகனுக்கு அரசு பணி வழங்க வேண்டும்' என, முதல்வரிடம் வலியுறுத்தினார். 'கவினின் தாய் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வசிக்கும் இடத்திலேயே பணி வழங்க வேண்டும்' என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இவற்றை முதல்வர் கனிவுடன் பரிசீலிப்பார் என நம்புகிறோம். வி.சி., சார்பில் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு, தனி வாரியம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.