உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுால் வெளியீட்டு விழாவை தவிர்த்த திருமாவளவன்

நுால் வெளியீட்டு விழாவை தவிர்த்த திருமாவளவன்

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பில் டிச.6ல் சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடந்திருந்தால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தி இருக்கும் என கணிக்கப்பட்டது.நூலை வெளியிட த.வெ.க., தலைவர் விஜய் ஒப்புக் கொண்ட நிலையில் நூலை பெற்றுக் கொள்வோராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒப்புக் கொண்டிருந்தார். இச்செய்தி வெளியானதும் தி.மு.க., தரப்பில் கொந்தளித்தனர்.ஏற்கனவே தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுப்பது போல கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்திய வி.சி.,க்கள் 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும்' என்றும் கேட்டு கோரிக்கை வைத்தனர்.ஆனால் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயுடன் மேடை ஏறுவது குறித்து உறுதியான தகவல் எதையும் திருமாவளவன் வெளிப்படுத்தவில்லை. இதனால், அவர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.தற்போது, நூல் வெளியீட்டு விழா தொடர்பாக அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. அதில், நூலை விஜய் வெளியிட, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவும் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெம்டுல்டேவும் பெற்றுக் கொள்வார் என வெளியிடப்பட்டிருக்கிறது. நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு திருமாவளவன் செல்வது தவிர்க்கப்பட்டிருக்கிறது.இது குறித்து வி.சி.,க்கள் வட்டாரங்கள் கூறியதாவது: திருமாவளவனின் முழு அனுமதிக்குப் பின்பே, நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், அது தொடர்பான செய்தி வெளியானதும், திருமாவளவன் மீது தி.மு.க., தரப்பு கடும் கோபம் அடைந்தது. 'கூட்டணிக்குள் இருந்து கொண்டு குழப்பம் விளைவிக்கிறார்' என முதல்வர் ஸ்டாலின் கோபமானார்.சமீபத்தில் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி இல்லத் திருமண விழாவுக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், திருமாவளவனிடம் தனியாக பேசினார். 'அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு நீங்கள் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால், வலுவான தி.மு.க., கூட்டனியில் பிரச்னை இருப்பது போல தோற்றம் உருவாகும்' என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.அப்போதே, 'விழாவுக்குச் செல்லாமல் தவிர்த்து விடுகிறேன்' என திருமாவளவன், முதல்வரிடம் சொல்லி விட்டார். இருந்தபோதும், 'திருமாவளவன் மேடையேற தயாராகி விட்டார்' என, உளவுத்துறையில் இருந்து முதல்வருக்கு தகவல் போனது.உடனே, மூத்த அமைச்சர் ஒருவரை அழைத்த ஸ்டாலின், 'நூல் வெளியீட்டு விழாவுக்கு திருமா வளவன் சொல்லக்கூடாது. சென்றால், அன்றைக்கே கூட்டணியில் இருந்து நீக்கி விடுவேன் என்பதை சொல்லி விடுங்கள்' என கோபமாக கூறியுள்ளார்.இதையடுத்து, திருமாவளவனிடம் பேசினார் அமைச்சர். முதல்வரின் கருத்தை அப்படியே சொல்லி விட்டார். திருமாவளவன், விழாவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்து விழா ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார். அதையடுத்தே, நூல் வெளியீட்டு விழாவில், திருமாவளவனுக்கு பதிலாக நீதிபதி சந்துருவும், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் அழைக்கப்பட்டனர்.நூல் வெளியீட்டு விழாவுக்குப் பின்பும், இந்தப் பிரச்னை தொடரும். நூல் வெளியீட்டு விழாவுக்கு திருமாவளவனைஅழைத்த, கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவனுக்கு தி.மு.க., தரப்பில் நெருக்கடி கொடுப்பர்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ