இது திரையுலகத்தை சார்ந்தவர்கள் ஆட்சி!
சென்னை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஒருமைப்பாடு தின பொதுக்கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வ மணி தலைமை வகித்தார். திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவு, சண்டை பயிற்சி, திரைக்கதை எழுத்தாளர்கள் உள்ளிட்ட, 23 சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு, 'நிமாய்கோஷ்' விருதுகளை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். பின், அவர் பேசியதாவது:முன்னாள் முதல்வர் கருணாநிதி, திரையுலகத்தை சார்ந்தவர். நம் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள். உங்களுடைய அரசு தான் தற்போது நடக்கிறது. அந்த வகையில், நீங்கள் தரக்கூடிய கோரிக்கை கடிதத்தை, அங்கு கொண்டு ஒப்படைப்பதே என் கடமையாக இருக்கும். கடந்த, 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த திரைப்பட விருதுகள, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் வழங்கப்பட்டு வருகின்றன. சின்னத்திரை விருதுகளும் விரைவில் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.