உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வே எண் வந்தாலும் உட்பிரிவு எண் வராது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்போர் அவதி

சர்வே எண் வந்தாலும் உட்பிரிவு எண் வராது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்போர் அவதி

சென்னை:சொத்து வாங்கியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் பெற, 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்கும் போது, பிரதான சர்வே எண் வந்தாலும், உட்பிரிவு எண் திரையில் வராததால், விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக, சொத்து வாங்கியவர்கள், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், 'இ - சேவை' இணையதளத்தில், நேரடியாகவும் மக்களே விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் விண்ணப்பங்கள், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு செல்லும். அவர்கள் கள ஆய்வு நடத்தி, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பர். கடந்த சில நாட்களாக, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் போது, அதற்கான இணையதளத்தில், பிரதான சர்வே எண்கள் வரும் நிலையில், பழைய உட்பிரிவு எண்கள் வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறிதாவது: சர்வே எண், ஏற்கனவே உள்ள உட்பிரிவுக்கு உட்பட்ட முழு சொத்தையும் வாங்கும் போது, அதற்கான பட்டா மாறுதலுக்கு, தானியங்கி முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், அடையாள விபரங்களை, சார் -- பதிவாளர் உறுதி செய்தால் போதும். ஆனால், சர்வே எண், பழைய உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட சொத்தின், ஒரு பகுதியை வாங்குவதாக இருந்தால், அதற்கு புதிய உட்பிரிவு எண் பெறுதல் தலைப்பில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவின் போது, மாவட்டம், தாலுகா, கிராமம் விபரங்களை உள்ளீடு செய்தால், பிரதான சர்வே எண்கள் திரையில் வருகின்றன.

முடக்கம்

அதை தேர்வு செய்தால், அருகில் இன்னொரு கட்டத்தில், அந்த சர்வே எண்ணில், தற்போது உள்ள உட்பிரிவு எண்கள் தோன்றும். இதில், பொருத்தமான உட்பிரிவை தேர்வு செய்தால், விண்ணப்ப பதிவில் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். ஆனால், பிரதான சர்வே எண்ணை தேர்வு செய்த பிறகு, உட்பிரிவு எண்கள் தற்போது வருவதில்லை. இதனால், விண்ணப்ப பதிவு பாதியில் முடங்குகிறது.மீண்டும் மீண்டும் முயற்சித்தாலும், இதே நிலை தொடர்வதால், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதை சரி செய்ய வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை என்ன?

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இது தொடர்பான புகார்கள் வந்துள்ளன. ஒரு சில இடங்களில் மட்டும், இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில், இப்பிரச்னை தீர்க்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை