சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 04) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:'சில்மிஷ' மத போதகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கிறிஸ்துவ சபை ஒன்றில், மூலச்சல் பகுதி வர்கீஸ், 55, என்பவர் போதகராக உள்ளார். இவர், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, வேதாகம வகுப்பிற்கு வந்த, 17 வயது சிறுவன், போலீசில் புகார் செய்தார். தக்கலை போலீசார், போக்சோவில் வர்கீசை நேற்று கைது செய்தனர்.காமுக பெயின்டருக்கு 'கம்பி'
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூரிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் பெயின்டர் ரவிச்சந்திரன், 45. இவர், தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். சிறுமியின் பாட்டி புகாரின் படி, ஆரணி போலீசார், ரவிச்சந்திரனை போக்சோவில் கைது செய்தனர்.வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
பெரம்பலுார் மாவட்டம், பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித், 19. இவர், பத்தாம் வகுப்பு படித்த, 15 வயது மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, 2022, மார்ச்சில் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். இதில், மாணவி கர்ப்பமடைந்தார். புகாரில், அஜித்தை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மகளிர் நீதிமன்ற நீதிபதி, அஜித்துக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.