சென்னை:''பல இடங்களில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் தி.மு.க.,வுக்கு வருகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமாலை கூறினார். சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி :முதல்வர் ஸ்டாலினிடம், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து, காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கேட்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம். அதில், அரசியல் சட்டமீறல் எதுவும் இல்லை. அவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கருதினால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும். மாநில அரசுக்கும், இந்த சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் குறித்து முதலில் முழுமையாக படியுங்கள்.திருமாவளவனுக்கு வலது கரமாக செயல்படுபவர், கட்சியின் துணைப்பொதுச் செயலரான லாட்டரி மார்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. முதல்வரும், ஆதவ் ஆர்ஜுனாவும் சந்தித்து பேசிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. லாட்டரி மார்டின் தொடர்பாக எந்த தகவலையும், தி.மு.க., - வி.சி.க.,விடம் கேளுங்கள். பல இடங்களில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் தி.மு.க.,வுக்கு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 'கோவையில் பிரதமர் மோடியின், 'ரோடுேஷா'விற்கு அனுமதி மறுத்த தி.மு.க., அரசின் நடவடிக்கையை எதிர்த்து, நாங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றி. நீதிமன்றத்தின் தீர்ப்பு, எதேச்சதிகார தி.மு.க., அரசுக்கு கிடைத்த குட்டு. தமிழகத்தில், பா.ஜ., மீது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் செல்வாக்கை, முதல்வர் ஸ்டாலினின் நாடகங்களால் தடுக்க முடியாது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்' என, தெரிவித்துள்ளார்.