ஐந்து இடங்களில் நாளை நடக்கிறது அனா... ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்
சென்னை:'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பு சார்பில் நடத்தப்படும், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற, குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆர்வமுள்ள பெற்றோர் விறுவிறுப்பாக முன்பதிவு செய்த நிலையில், நாளை ஐந்து இடங்களில், இந்நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழும், 'வேலம்மாள் நியூஜென் கிட்ஸ்'சும் இணைந்து வழங்கும், 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. வித்யாரம்பம்
குழந்தையின் கையால், நெல் மணியில் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது விஜயதசமி நாளில் தான். அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுனர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின் 'அ'கரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.சென்னை படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், நாவலுார் வேலம்மாள் நியூஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சூரப்பேட் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் ஆகிய ஐந்து இடங்களில், நாளை காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் துவக்கலாம். முன்பதிவு
இதற்கான முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே வடபழனி, தாம்பரம் பகுதிகளுக்கான முன்பதிவு நிறைவடைந்து விட்டது. மற்ற பகுதிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.படப்பை, நாவலுார், சூரப்பேட் பகுதிகளில் நடக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், இந்த செய்தியில் உள்ள, 'கியூஆர் கோடு' குறியீடை 'ஸ்கேன்' செய்து, அதில் உங்களுக்கு அருகில் உள்ள பகுதியை தேர்வு செய்து, குழந்தை குறித்த விபரங்களை குறிப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்.இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'லேர்னிங் கிட்' தொடர்ச்சி 9ம் பக்கம்ஐந்து இடங்களில்...3ம் பக்கத் தொடர்ச்சிஒரு குழந்தை டி - ஷர்ட், குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, 81229 71772, 81483 01771 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பிஞ்சு விரல் பிடித்து 'அ'கரம் கற்பிக்கும் பிரபலங்கள்
முன்னாள் நீதிபதிகள் துரைசாமி, பி.என்.பிரகாஷ், பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், திருப்பூர் கிருஷ்ணன், கிரிஜா ராகவன், காலச்சக்கரம் நரசிம்மா, பிரபுசங்கர், விஞ்ஞானி டில்லிபாபு, மருத்துவர்கள் செங்கோட்டுவேலு. நிர்மலா ஜெய்சங்கர், ஜெயராஜா ஆகியோர், பிஞ்சுகளின் விரல் பிடித்து, 'அ'கரத்தை துவக்க உள்ளனர்.அதேபோல, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலச்சந்தர், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான பவன்குமார், அன்பு, முன்னாள் டி.ஜி.பி., கே.வி.கே.ஸ்ரீராம், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் ஆகியோரும் குழந்தைளுக்கு குதுாகலமாக 'அ'கரம் பயிற்றுவிக்க உள்ளனர்.மேலும், டி.ஏ.வி., குழும பள்ளிகளின் கல்வி இயக்குனர் சாந்தி அசோகன், தொழிலதிபர்களான தங்கமலர், நாராயணமூர்த்தி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாகன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுமதி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, குட்டிச் செல்வங்களுக்கு கல்வி செல்வத்தை துவக்க உள்ளனர்.இவர்களுடன், நாடக நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, பாடகர் சீனிவாஸ், திரைப்பட கலைஞர் உமா பத்மநாபன், தர்மபிரோப்தனா அறக்கட்டளை அறங்காவலர் கிரி ஜே.சீதாராமன், பேராசிரியர் சடகோபன் ராஜேஷ் ஆகியோரும் 'அ'கரம் பழக்க உள்ளனர்.