சிறந்த மேலாண்மை கல்லுாரிகள்: மூன்று ஐ.ஐ.எம்.,களுக்கு இடம்
சென்னை:உலகின், 100 சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இந்தியாவின் மூன்று ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. உலகம் முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள, 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' எனும், கியூ.எஸ்., அமைப்பு ஆய்வு செய்து, ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டின் பல்கலை அளவிலான தரவரிசை பட்டியல், கடந்த ஜூனில் வெளியிடப்பட்டது. இதில், இந்தியாவை சேர்ந்த பல முன்னணி கல்வி நிறுவனங்கள், முக்கிய தர வரிசையை பிடித்திருந்தன. இந்நிலையில், உலகம் முழுதும் மேலாண்மை கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசையை, கியூ.எஸ்., அமைப்பு வெளியிட்டுள்ளது. உலக தரவரிசையில், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள, 'பென்சில்வேனியா' பல்கலை முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடம், 'ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்' மற்றும் மூன்றாம் இடத்தை, 'எம்ஐடி ஸ்லோன்' பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு, 53வது இடம் பிடித்திருந்த, பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் எனும், ஐ.ஐ.எம்., பெங்களூரு, ஒரு இடம் முன்னேறி, நடப்பாண்டு தர வரிசையில், 52வது இடத்தை பிடித்து உள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள, ஐ.ஐ.எம் ஆமதாபாத், 58வது இடம் பிடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் உள்ள, ஐ.ஐ.எம் கொல்கட்டா, கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி, 64வது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டு மொத்த தர வரிசை பட்டியலில், இந்தியாவை சேர்ந்த, 14 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.