அலோபதி சிகிச்சையுடன் பாரம்பரிய மருத்துவம்: பொது சுகாதார துறை திட்டம் பொது சுகாதார துறை திட்டம்
சென்னை:ஆரம்ப சுகாதார நிலையங்களில், அலோபதி மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளையும் சேர்த்து வழங்க, பொது சுகாதார துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 6,000க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றின் கீழ், தாய் - சேய் நல சிகிச்சைகள், தடுப்பூசி சேவைகள் உட்பட அனைத்து விதமான துவக்க நிலை சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர், வைரஸ் காய்ச்சல்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவதையும் பொது சுகாதார துறை முன்னெடுத்து வருகிறது. தற்போது, 400 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும், அலோபதி மற்றும் சித்தா என, இரு சிகிச்சை வசதிகளும் உள்ளன.இந்நிலையில், அலோபதி மருத்துவத்துடன் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் என, அனைத்து இந்திய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து, பொது சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.அதன்படி, பொது சுகாதார துறை, இந்திய மருத்துவ ஆணையரகம், தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுஉள்ளது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு, வழக்கமான மருந்துகளுடன் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளும் தேவை அடிப்படையில் வழங்கப்படும். 'முதல் கட்டமாக ஓரிரு இடங்களில் இந்த வசதி துவங்கப்பட்டு, பொது மக்களின் வரவேற்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்படும்' என, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.