ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பழைய கன்னிவாடி, கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், 21. காரில் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்றார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள சாலைப்புதுார் எட்டுக்கை காளியம்மன் கோவில் அருகே சென்றபோது, மதுரையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியது. இதில், மதுரை வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கல ராஜ், 27, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கேசவன், 17, சம்பவ இடத்திலேயே பலியாகினர். அழகர் என்பவர் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற புவனேஸ்வரன், ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் காருடன் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அலட்சியமே காரணம்
விபத்து நடந்த இடத்தில் பாத யாத்திரை பக்தர்களுக்கு தனி நடைபாதை இல்லை. ரோடும் குறுகலாக உள்ளது. பல இடங்களில் இதே நிலை தான் காணப்படுகிறது. டிசம்பர் இறுதியில் இருந்தே பக்தர்கள் பாதயாத்திரை செல்ல துவங்கிய நிலையில், தேவையான வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. தங்குமிடம், குளியல், கழிப்பறை வசதியின்றி பக்தர்கள் தவிக்கின்றனர். போலீஸ் தரப்பிலும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கும் ஒளிரும் ஜாக்கெட், குச்சிகளையும் போலீசார் வழங்கவில்லை.அதிகாலை என்பதால், பனிமூட்டத்தில் பக்தர்கள் நடந்து செல்வது சரிவர தெரிவதில்லை. அருகில் செல்லும்போது தான் வாகன ஓட்டிகளுக்கு தெரிகிறது. ஒளிரும் குச்சிகள், ஜாக்கெட்கள் இருந்தால் இவ்விபத்தை தடுத்திருக்கலாம்.