தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய ஐந்து நிமிடங்களில் முடிந்தது
சென்னை : தீபாவளி பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, துவங்கிய ஐந்து நிமிடங்களில் முடிந்தது; அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. 60 நாட்களுக்கு முன், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 'ஸ்லீப்பர்' பெட்டி அந்த வகையில், அக்., 17ம் தேதி அன்று, சென்னையில் இருந்து விரைவு ரயில்களில், தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் முன்பதிவு நடந்தது. முன்பதிவு துவங்கிய மூன்று முதல் ஐந்து நிமிடங்களில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களில், 'ஸ்லீப்பர்' பெட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. காலை 8:15 மணிக்குள், பெரும்பாலான ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. சென்னையில் இருந்து செல்லும் பாண்டியன், பொதிகை, நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் சேரன், நீலகிரி ரயில்களிலும் முன்பதிவு முடிந்தது. கூடுதல் பெட்டி இது குறித்து, ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ஜெய்பால்ராஜ் ஆகியோர் கூறியதாவது: சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கோவை வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். தென் மாவட்டத்துக்கு அந்தியோதயா ரயில் இயக்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மாதத்துக்கு முன்னரே தீபாவளி சிறப்பு ரயில் அறி வித்தால், பயணத்தை திட் ட மிட வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.