உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேரெழுந்துார் சிவன் கோவில் கல்வெட்டுகள் படியெடுப்பு

தேரெழுந்துார் சிவன் கோவில் கல்வெட்டுகள் படியெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்துாரில், பழமையான வேதபுரீஸ்வரர் எனும் சிவன் கோவில் உள்ளது. இங்கு, நிறைய கல்வெட்டுகள் உள்ளன. மத்திய தொல்லியல் துறையின் தென்மாநில கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம், கல்வெட்டாய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட குழுவினரிடம், படியெடுத்து ஆவணப்படுத்த உத்தரவிட்டார். தற்போது அப்பணி நடக்கிறது.

இது குறித்து, நாகராஜன் கூறியதாவது:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், தேரெழுந்துாரில் உள்ள, வேதபுரீஸ்வரர் கோவில் அர்த்தமண்டபத்தின் கதவு துாண் உள்ளிட்ட இடங்களில், 10 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளோம். அதில் ஒரு கல்வெட்டு, குலோத்துங்க சோழனின் 44வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1114ல் பொறிக்கப்பட்டது. இதன்படி, இந்த ஊர், 'திருவழுந்துார்' என முற்காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. இந்த கோவிலுக்கு, நந்தா விளக்குகள் மற்றும் இரவு சந்தி விளக்கு என, ஐந்து விளக்குகளை, மாதம் ஒருவர் என, ஐந்து பேர் ஏற்ற வேண்டும் என்பதற்காக, கவினியன் வாமன் சிறிலங்கோவியன் என்பவர், கவினியன் வாமன் நாராயணன், செய்யிரிய சித்திரன், பரதாயன் கேரளன், நாராயணன், கரநாட்டான், திருவழுந்துாருடையான் தாநாட்டார் அணியளந்தார் நின்றான் எனும் ஆயிரத்தெழுநுாற்றுவ தாநாட்டான் ஆகிய சிவ பிராமணர்களுக்கு, பொற்காசுகளை தானமாக வழங்கிய தகவல் உள்ளது. மற்ற கல்வெட்டுகளை ஆராயும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nellai Ravi
அக் 07, 2025 08:27

பிராமணர்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள்.


Kasimani Baskaran
அக் 07, 2025 03:57

என்னது பிராமணர்கள் நன்கொடை கொடுத்தார்களா... உடன்பிறப்புக்கள் ஒப்பாரி வைப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை