உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் தனி விமானத்தில் பயணம் மறக்க முடியாத நிகழ்வு: நாகேந்திரன்

பிரதமரின் தனி விமானத்தில் பயணம் மறக்க முடியாத நிகழ்வு: நாகேந்திரன்

சென்னை: 'பிரதமர் மோடி, துாத்துக்குடி முதல் திருச்சி வரை, அவரது தனி விமானத்தில் என்னை அழைத்து சென்றது, என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகம் வந்த பிரதமர் மோடி, துாத்துக்குடியில் 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். இந்திய வரலாற்றிலேயே தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மன்னர்கள் மீது அளவற்ற நேசம் கொண்ட பிரதமர், நம் மோடி ஒருவரே. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு வந்த முதல் பிரதமர் என்ற வரலாற்று சிறப்பையும் பெற்றிருக்கிறார். தமிழகத்தை நாத்திக கரும்புகை சூழ முயன்றாலும், 'தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணிய பூமி' என்பது, மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதன் வெற்றி முழுதும் பிரதமர் மோடியையே சாரும். பார்லிமென்டில் செங்கோலை நிறுவியது முதல், சோழ மன்னர்களுக்கு சிலை அமைப்பது வரை, தமிழர் அடையாளங்களை மீட்பதில் முனைப்புடன் செயலாற்றும் மோடியை, தமிழகம் மனதார வாழ்த்தி வணங்குகிறது. மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்து, இரவு நெடுநேரம் துாத்துக்குடி விழாவையும், மறுநாள் காலை கங்கைகொண்ட சோழபுரத்தில் முப்பெரும் விழாவையும் முடித்துவிட்டு, டில்லி சென்ற பிரதமர் மோடி, ஓயாத கடல் அலை போன்றவர். ஒரு மனிதன் இத்தனை சுறுசுறுப்புடன் செயல்பட முடியுமா என இளைஞர்கள் வியந்து பார்க்கும் ஒப்பற்ற தலைவர். அந்த மாமனிதருடன் இரு நாட்களை கழித்தது, என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அது மட்டுமின்றி, துாத்துக்குடி முதல் திருச்சி வரை, அவரது தனி விமானத்தில் என்னை பிரதமர் மோடி அழைத்து சென்றதும், என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூலை 29, 2025 07:13

எல்லாம் வாக்கு வங்கியை குறிவைத்தே.தேர்தலுக்கு பிறகு நான்காண்டுகளுக்கு ஓய்வில் இருப்பர் அல்லது உல்லாச பயணத்தில் உலகத்தை சுற்றி வருவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை