அதிக மகசூல் தரும் இரு ‘யூக்கலிப்டஸ்’
சென்னை: அதிக மகசூல் தருவதுடன், வறட்சியை தாங்கும் திறன் உடைய, இரு யூக்கலிப்டஸ் கலப்பினங்களை, டி.என்.பி.எல்., எனப்படும் தமிழக செய்தித்தாள் காகித நிறுவனம் உருவாக்கி உள்ளது. டி.என்.பி.எல்., அச்சு மற்றும் எழுது காகிதம், காகித அட்டை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதிக மகசூல் தரும் இரு யூக்கலிப்டஸ் கலப்பினங்களை, டி.என்.பி.எல்., 192 மற்றும் டி.என்.பி.எல்., 193 என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. அவற்றை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைகள் ஆணையம், கடந்த ஆக., 6ல் அங்கீகரித்துள்ளன. பல ஆண்டு ஆராய்ச்சி வாயிலாக உருவாக்கப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட யூக்கலிப்டஸ் மரக்கன்றுகள், வறட்சியைத் தாங்கும் திறன், காகிதக்கூழ் உற்பத்தித் திறன், விவசாய நிலங்களை திறமையாக பயன்படுத்துதல் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன.