இருசக்கர வாகன விபத்துகள் 2 ஆண்டில் 16,172 பேர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கியதில், 16,172 பேர் இறந்துள்ளனர்.தமிழகத்தில், 3.76 கோடி வாகனங்கள் உள்ளன. இவற்றில் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை 3.15 கோடி. இருசக்கர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து விதிகளை மீறுவதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல உயிரிழப்பும் அதிகரிக்கிறது. இதை தடுக்க விழிப்புணர்வு அவசியம்.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களில், 80 சதவீதத்திற்கு மேலாக இருசக்கர வாகனங்கள் தான் உள்ளன. அதை ஓட்டிச் செல்வோர், பின்னால் அமர்ந்து செல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம். அதேபோல, 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், பெரும்பாலான குடும்பங்களில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர் ஊக்குவிக்கின்றனர். ஓட்டுநர் உரிமம் பெறாத சிறுவர்கள், இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்வதால், விபத்துகள் அதிகம் நடக்கின்றன.அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மொபைல் போனில் பேசியபடி செல்வது, இடது, வலதுபுறம் வாகனங்களை கவனிக்காமல் திருப்புவது உள்ளிட்ட காரணங்களால், விபத்துகள் அதிகம் நடக்கின்றன. 50 சதவீத இருசக்கர வாகனங்களில், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லை.