உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பாக பணிபுரியும் நிர்வாகிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு: உதயநிதி உறுதி

சிறப்பாக பணிபுரியும் நிர்வாகிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு: உதயநிதி உறுதி

தேனி; ''சிறப்பாக பணிபுரியும் சார்பு அணி நிர்வாகிகளுக்கு 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்,'' என, தேனியில்யில் நடந்த தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி உறுதி அளித்தார்.தேனி பெரியகுளம் ரோடு தனியார் மஹாலில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: ஜூலை 15ல் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களின் தீர்க்க முடியாத பிரச்னைகள், கோரிக்கைகளை நிர்வாகிகள் காது கொடுத்து கேளுங்கள். முடிந்தவரை தீர்வு காண முயற்சியுங்கள். உங்களுக்குள் (கட்சியினருக்குள்) சிறு சிறு பிரச்னைகள் இருக்கலாம். அது எளிதாக பேசி தீர்க்கக் கூடியவை. 2026 சட்டசபை தேர்தல் அறிவிக்க 10 மாதங்களே உள்ளன. எனவே அடுத்து வரும் ஒவ்வொரு மணித்துளியும்'கோல்டன் ஹவர்ஸ்'ஆக கருத வேண்டும். கட்சிக்கு ஆதரவாக உள்ள வாக்காளர்களை தக்க வைக்க வேண்டும். புதிய வாக்காளர்களை கட்சி ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும். தற்போது அ.தி.மு.க.,வும், பா.ஜ.,கவும் ஒன்றிணைந்து நம்மை எதிர்க்க தயாராகி விட்டன. அந்த கூட்டணியை மக்கள் விரட்டியடிக்க தயாராக உள்ளனர். மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறான செய்திகளை கூறி சென்றார். ஊழல் கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொண்டு தி.மு.க.,வை குறை கூற அவருக்கு தகுதி இல்லை. பா.ஜ., மத்தியில் 11 ஆண்டுகள் ஆட்சியில் உள்ளது. அவர்களுடைய ஊழல் குறித்து பேச வேண்டும். அமித்ஷா நம்மை குறை சொல்கிறார்.ஆனால் நிடி ஆயோக்கில் ஆரம்பித்து அனைத்து திறன் வளர்ச்சியிலும் தமிழகம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டுகிறது.கீழடி ஆய்வை பார்த்தால் மத்திய பா.ஜ., அரசுக்கு வயிறு எரிகிறது. நம் வரலாறு மேம்பட்டு இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கடி 'தேர்தல் வந்தால் கட்சி உடன்பிறப்புக்கள் சிங்கிள் டீயை குடித்து தீயா வேலை செய்வர்' என கூறுவார். அதை நாம் நிருபிக்க வேண்டும். 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும். இத்திட்டத்தில் ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீதம் புதியவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்திக்க வேண்டும். உங்களில் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

உணவுடன் முட்டை வழங்க கர்ப்பிணிகள் முறையீடு

வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப்யாதவ், கூடுதல் செயலர் ஷஜீவனா, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், பிறதுறை அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.மையத்தை ஆய்வு செய்த துணை முதல்வர் அங்கிருந்த குழந்தைகளிடம் கற்றுக்கொடுக்கப்படும் பாடல்கள், கதைகள், உணவு குறித்து கேட்டார். கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், அங்கன்வாடி குழந்தைகளின் தாய்மார்களுடன் அவர் கலந்துரையாடினார்.அப்போது கர்ப்பிணிகள் அவரிடம் கூறுகையில்,'செவ்வாய் கிழமைகளில் அரசு ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்கு செல்லும் போது அங்கு வழங்கும் உணவுடன் முட்டையும் வழங்க வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கிட வேண்டும்,' என்றனர். ஒரு மணிநேர ஆய்வுக்குப்பிறகு அங்கிருந்து புறப்பட்ட துணை முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமத்தினர் மனு அளித்தனர்.

ஆய்வுக்கூட்டம்

முன்னதாக தேனியில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த அரசு துறை ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அமைச்சர் பெரியசாமி, எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை