சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில்கள் சார்பில், 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியருக்கு 'சிறப்பு செய்யும் திட்டம்' தமிழகம் முழுதும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, 200 தம்பதியருக்கு தாம்பூல தட்டு வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பார்த்தசாரதி தெரு மற்றும் நல்லதம்பி தெருவில், 3.41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்.நம்பர் ஒன்
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை மண்டலத்தில், 200 மூத்த தம்பதியர் உட்பட தமிழகம் முழுதும் 831 மூத்த தம்பதியருக்கு, இன்று சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, 2,500 ரூபாய் மதிப்புள்ள புத்தாடை, தாம்பூலத் தட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.நாட்டின் 'நம்பர் ஒன் முதல்வர்' என, நம் முதல்வர் அழைக்கப்படுவதைப் போல், முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில், 'நம்பர் ஒன் அமைச்சர்' என்றால், அது அமைச்சர் சேகர் பாபு தான்.இவர், துறை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தியுள்ளார். தற்போது நடத்தப்படும் நிகழ்ச்சி சற்று வித்தியாசமானது. பொதுவாக, மகன், மகள் அல்லது பேரன் திருமணத்தை, அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டி தலைமை ஏற்று நடத்தி வைப்பர்.வாய்ப்பு
ஆனால், இந்த பேரனுக்கு, தாத்தா, பாட்டி திருமணத்தை நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருமணத்தின் போது தாத்தா, பாட்டியிடம் அனுமதி பெற்று, பேரனோ , மகனோ மாலை மாற்றுவர். இந்த மேடையில், பேரனிடம் அனுமதி பெற்று, தாத்தா, பாட்டி மாலை மாற்றிக் கொண்டனர். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் ஸ்ரீ ராமானுஜ எம்பார் சுவாமிகள். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் வருகைக்காக 4 மணி நேரம் காத்திருந்த முதியோர்
சென்னையில் நேற்று காலை 9:00 மணிக்கு, மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, காலை 7:00 மணிக்கே, விழாவில் பங்கேற்கவிருந்த முதியோர் அழைத்து வரப்பட்டு, நிகழ்ச்சி அரங்கில் அமர வைக்கப்பட்டனர். காலை 9:00 மணியளவில், துணை முதல்வர் வருகை தாமதமாவதால், 10:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி, காலை 11:00 மணிக்கு நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார். இதனால், காலை 7:00 மணிக்கு வந்த மூத்த தம்பதியர், நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். இதனால், முதியோர் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவில் விழாவில் முதல்வர் படம்; இந்து தமிழர் கட்சி கண்டனம்
கோவில் விழா பேனர்களில், அந்த கோவில் இறைவன், இறைவி படத்திற்கு பதில், முதல்வர், துணை முதல்வர் படம் இடம்பெற்றதற்கு, இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஒவ்வொரு ஹிந்து கோவிலுக்கும் உரிமையாளர், அந்தந்த கோவிலில் இருக்கும் இறைவன் மற்றும் இறைவி. கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் பணம், அந்தந்த கோவில் நலன் மேம்பாட்டிற்குதான். அந்த பணத்தை வேறு எந்த வகையான விஷயங்களுக்கும் செலவிடக்கூடாது என, நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. ஆனால், தி.மு.க., அரசு பதவி ஏற்ற பின், முதல்வர், துணை முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் ஆகியோர், கோவில் உரிமையாளர் போல் நடந்து கொள்கின்றனர். ஹிந்து கோவில்களில் நடத்தப்படும் விழாக்களில், அந்தந்த கோவிலின் உரிமையாளரான இறைவன், இறைவி படங்களை, பேனர்களில் அச்சிடாமல், தி.மு.க.,வினர் நடத்தும் விழா போல், முதல்வர், துணை முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், அந்தந்த மாவட்ட அமைச்சர் படங்களை அச்சிடுவது, கண்டனத்துக்குரியது. தமிழக அரசு நிதியிலிருந்து இதுவரை, ஹிந்து கோவில்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறது. தமிழக அரசின் திட்டங்களுக்கு, எவ்வளவு ஹிந்து கோவில்களின் நிலங்களை, வளங்களை எடுத்திருக்கிறது என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.