உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுப்பாடற்ற கூட்டமே கரூர் துயரத்திற்கு காரணம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கட்டுப்பாடற்ற கூட்டமே கரூர் துயரத்திற்கு காரணம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை: ''கட்டுப்பாடற்ற கூட்டமே, கரூர் துயரத்திற்கு காரணம்,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, கரூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கரூர் கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிக கொடுமையானது. யாராலும், எந்தச் சூழலிலும், ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த துயர சம்பவத்தில், கரூருக்கு வருகை தந்து மக்களுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி. இதுபோன்ற நிகழ்வு, இனி நடக்காமல் இருக்க அனைவரும் சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்வதிலும், உயிரிழந்தோர் வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொல்வதிலும், எங்களின் முழு கவனமும் இருந்தது. கரூர் துயர சம்பவத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை. மனிதாபிமானத்தோடு தான் பார்க்கிறேன். உயிரிழந்த, 41 பேரில், 31 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினரோடு, நான் நேரடியாக தொடர்பில் இருப்பவன். உயிரிழந்த ஒருவர் தி.மு.க., முப்பெரும் விழாவுக்கும் வந்தவர். வேடிக்கை பார்க்கச் சென்றவர் உயிரிழந்துள்ளார். தி.மு.க., முப்பெரும் விழாவுக்கு தனியார் இடத்தை தேர்வு செய்து நடத்தினோம். குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தோம். ஆனால், விஜய் கூட்டத்தில் நெரிசல் சம்பவம் நடந்த மறுநாள், வேலுச்சாமிபுரத்தில், 2,000 செருப்புகள் கிடந்தன. ஒரு குடிநீர் பாட்டில் கூட இல்லை. மக்களுக்கு குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட தேவையான வசதிகளை, விஜய் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் தான் செய்ய வேண்டும். இதை நான் குறையாக சொல்லவில்லை. இந்த வசதிகளை, த.வெ.க.,வினர் செய்திருக்க வேண்டும். மாலை, 4:00 மணிக்கு வேலுசாமிபுரத்தில், 4000 பேர் மட்டுமே இருந்தனர். அப்போது கூட்டம் நடந்திருந்தால், இந்த துயரம் நடந்திருக்காது. சம்பள நாள் என்பதால், 7:00 மணிக்கு அதிக கூட்டம் திரண்டுள்ளது. ஒரு தலைவர் பேசும் கூட்டத்திற்கு, சரியான இடத்தை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தான் தேர்வு செய்ய வேண்டும். கூட்டத்தில், ஸ்பிரே அடித்திருந்தால் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தெரிந்திருக்கும். கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, அதை தாங்க முடியாமல் ஜெனரேட்டர் அறையின் தடுப்புகளை உடைத்து கொண்டு வருகின்றனர். ஜெனரேட்டர் நின்ற போது கூட, மின் விளக்குகள் அணையவில்லை. விஜய் பேசும் போது, கூட்டத்திலிருந்த ஒருவர் தண்ணீர் கேட்க, விஜய் தண்ணீர் பாட்டில் கொடுக்கச் சொல்கிறார். தண்ணீர் கேட்டு கூச்சல் போடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி உள்ளது. எந்த தலைவராக இருந்தாலும், வாகனத்தில் வரும் போது, முன் இருக்கையில் அமர்ந்திருப்பர் அல்லது வாகனத்தின் மேலே நின்று கையசைப்பர். ஆனால், விஜயோ வாகனத்தின் உட்புற இருக்கையில் அமர்ந்திருந்தார். கூட்டம் அதிகமாகி விட்டது. முன்னமே நிறுத்தி பேசுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டும், த.வெ.க.,வினர் கேட்கவில்லை. வரும் போதே வாகனத்தின் மேலே நின்று விஜய் கையசைத்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும், அனைவரும் கூட்ட இடத்திற்கு வர வேண்டும் என நினைத்து இப்படி செய்திருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர். விஜயுடன் வந்த, 4,000 பேரும் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கரூரில் மட்டும் ஏன் நடந்தது என்று விஜய் கேட்கிறார். அவர் பேசிய அனைத்து இடங்களிலும் மக்கள் மயக்கமடைந்த சம்பவங்கள் நடந்தன. அதனை சரி செய்யும் சூழலை அவர்கள் உருவாக்கவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் நடந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். நடந்த தவறை ஒப்புக் கொள்ளாமல், தி.மு.க., அரசின் மீது திசை திருப்பி, மடைமாற்றம் செய்ய முயற்சி செய்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். கரூரில் விஜய்க்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம். அதே இடத்தில், அ.தி.மு.க.,வுக்கு 15000 பேர் வந்தனர். விஜய்க்கு, 25000 பேர் வந்தனர். 10000 பேர் கூடுதலாக நின்று இருக்க முடியும். கட்டுப்பாடு இல்லாததால், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த யாரும் இல்லாததால், இதுபோன்ற துயரம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

பா.ஜ., குழு மணிப்பூர் செல்லாதது ஏன்?

செந்தில் பாலாஜி மேலும் கூறியதாவது: கரூருக்கு வந்த பா.ஜ., - எம்.பி.க்கள் குழு, வன்முறை நிகழ்ந்த மணிப்பூருக்கும், உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நெரிசல் சம்பவம் நடந்த இடத்திற்கும், குஜராத்தில் பாலம் இடிந்த சம்பவம் நிகழ்ந்த போது, அங்கும் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அங்கெல்லாம் செல்லாத பா.ஜ., உண்மை கண்டறியும் குழு, கரூருக்கு மட்டும் வந்து உண்மையை கண்டறிய முயற்சி செய்துள்ளது. சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டவர்களையும் விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

xyzabc
அக் 02, 2025 10:37

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.


Ramesh Sargam
அக் 02, 2025 08:56

கட்டுப்பாடற்ற கூட்டமே கரூர் துயரத்திற்கு காரணம். சொல்லிட்டாருப்பா நீதிபதி பாலாஜி. ஆக கூட்டத்தை கூட்டிய விஜய், விஜய் கட்சியினர் தவறு செய்யவில்லை. விஜய் கூட்டம் என்றால் அதிக மக்கள் வருவார்கள் என்று அறிந்து அந்த கூட்டத்திற்கு விஸ்தாரமான இடத்தை ஒதுக்குவதற்கு பதில், ஒரு சிறிய இடத்தை வேண்டுமென்றே ஒதுக்கிய திமுக அரசு தவறு செய்யவில்லை. போதிய பாதுகாப்பு அளிக்காத காவல்துறை தவறு செய்யவில்லை. மக்கள்மட்டும்தான் தவறு செய்துள்ளார்கள். அப்படித்தானே பாலாஜி. நீயும், உன் காரணமும். ஓடிப்போயிடு.


VENKATASUBRAMANIAN
அக் 02, 2025 08:36

புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பு. மணிப்பூர் சம்பவம் வேறு. இது வேறு.


சமீபத்திய செய்தி