உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வ.உ.சி.,யின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

வ.உ.சி.,யின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

சென்னை: ''வ.உ.சிதம்பரம் பிள்ளையின், 'சுயசார்பு இந்தியா' என்ற கனவை, பிரதமர் மோடி இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்,'' என, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய, 'வ.உ.சிதம்பரம் பிள்ளையின் உணர்ச்சி மிகு வாழ்க்கை வரலாற்று காவியம்' என்ற, ஆங்கில நுால் வெளியீட்டு விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடந்தது. புத்தகத்தின் முதல் பிரதியை, சார்லஸ் மார்ட்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்டார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் பெற்றுக் கொண்டார். விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசியதாவது:கடந்த, 1906ம் ஆண்டிலேயே, சுதேசி இயக்கத்தை ஏற்படுத்தியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. தேசம் தான் முக்கியம் என வாழ்ந்தவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன் சொத்தை விற்று, கப்பல் வாங்கி இயக்கியவர். இது, சாதாரணமான விஷயம் கிடையாது. அன்றைக்கே சுயசார்பு பாரதத்தை நிறைவேற்றியவர். அவரது கனவை, பிரதமர் மோடி, இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ், சென்னை ஐ.சி.எப்., நிறுவனத்தில், 'வந்தே பாரத்' ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கொரோனா காலத்தில் தடுப்பூசிக்காக, நம்மிடம் கையேந்துவர் என, பல நாட்டினர் இந்தியாவை எதிர்பார்த்தனர். ஆனால், கொரோனா தடுப்பூசிகளை நாமே தயாரித்து வெளிநாடுகளுக்கும் வழங்கினோம். கடந்த, 2014க்கு முன், ராணுவ தளவாடங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது, 50,000 கோடி ரூபாய்க்கு மேல், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் வீரர்கள் போகாமல், ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக, நம் தொழில் நுட்பத்தில், அந்நாட்டிற்கும், பயங்கரவாதிகளுக்கும் சரியான பாடத்தை புகட்டினோம். பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையால், இந்தியாவில் உற்பத்தி செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் வருகின்றன. வ.உ.சி.,யின் தியாகம் போற்றப்பட வேண்டும்.அவரது பெருமைகளை, இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு இந்த புத்தகம் துணையாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை, திருச்செந்துார் செங்கோல் ஆதீனம், வ.உ.சி.,யின் வாரிசு சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை