நெல் கொள்முதல் ஈரப்பத முடிவை விரைவாக அறிவிக்க வலியுறுத்தல்
சென்னை:மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இது தொடர்பாக, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய மூன்று குழுக்கள், தமிழகம் வந்து ஆய்வு செய்தது. ஆய்வு முடிவை, மத்திய உணவுத் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு, மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு செய்தும், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப் பதம் உயர்த்தப்படவில்லை. அதே நிலை இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக, மத்திய குழு சமர்ப்பித்த ஆய்வு முடிவை விரைவாக வெளியிட்டு, ஈரப்பத உயர்வு அறிவிப்பை வெளியிடுங்கள் என, மத்திய உணவுத் துறை அதிகாரிகளிடம், தமிழக உணவுத் துறை உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தி உள்ளன.