திருப்பூர் துரைசாமி உட்பட ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள் 17 பேரை, தி.மு.க.,வில் சேர்க்க, வைகோ முட்டுக்கட்டை போட்டுள்ளதால், இணைப்பு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, தி.மு.க., தலைமை.கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மகன் துரைக்கு, அக்கட்சியில் முதன்மை செயலர் பதவி வழங்கப்பட்டது. அதற்கு மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் சிலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கொள்கை பரப்புச் செயலர் அழகு சுந்தரம், மாவட்டச் செயலர் செங்குட்டுவன் உட்பட, 17 பேர், ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறினர்.ஆதரவாளர்களுடன் அவர்கள் தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்தனர். தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இருப்பதால், கூட்டணி தர்மத்தை மதித்து, அவர்களை சேர்க்க, தி.மு.க., தயங்கியது. இச்சூழலில், ம.தி.மு.க.,வுக்கு பா.ஜ., துாது விட்ட தகவலும், தே.ஜ., கூட்டணியில் சேர, 15 தொகுதிகள் வைகோ தரப்பில் கேட்ட தகவலும் வெளியானது.இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, ம.தி.மு.க., அதிருப்தியாளர்களை சேர்க்க பச்சைக் கொடி காட்டியதுடன், அப்பொறுப்பை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்தது. அதன்படி அவர், கடந்த தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்ட, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் முத்துரத்தினத்தை, தி.மு.க.,வில் இணைத்தார். அவரை தொடர்ந்து, ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறிய 17 பேரை சேர்க்கும் பேச்சு துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 17 பேரும் தி.மு.க.,வில் இணைவதற்கான ஏற்பாடுகளை, செந்தில் பாலாஜி செய்தார். இந்த தகவல் வைகோவுக்கு தெரிய வந்ததும், ம.தி.மு.க., பிளவுபடும் சூழலை தடுக்க, அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை வைகோ சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதாகவும், தரும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வதாகவும் வைகோ உறுதி தெரிவித்துள்ளார்.இதையடுத்தே, 17 பேரையும் தி.மு.க.,வில் சேர்க்கும் திட்டத்தை, தி.மு.க., தலைமை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. - நமது நிருபர் -