பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
பெங்களூரு; 'கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி' என அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87, பெங்களூரில் நேற்று காலமானார்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர் சரோஜா தேவி. 16 வயதில், கன்னடத்தில் ஹொன்னப்ப பாகவதரின், மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் திரையுலகுக்கு வந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் உட்பட பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமை உண்டு. கன்னடத்தில் ராஜ்குமார், உதயகுமார், கல்யாண்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், ஹிந்தியில் திலீப்குமார், ராஜேந்திர குமார், சுனில் தத் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.மொத்தம் ஐந்து மொழிகளில், 161 திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழில், ஆலய மணி, கலங்கரை விளக்கம், எங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்கள் காலத்தால் அழியாதவை.கடந்த 2019ல் திரைக்கு வந்த புனித் ராஜ்குமாரின், நட சார்வபவுமா படம் தான், அவரது கடைசி படம். அதன்பின் அவர் நடிக்கவில்லை. பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார்.அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பெங்களூரு மல்லேஸ்வரம் இல்லத்தில், இன்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதன்பின் அவரது சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்தில், ஒக்கலிகர் சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடக்கின்றன.சரோஜா தேவி திரைமறைவில் பல பொது சேவைகள் செய்தவர். தன் கண்களை தானம் செய்துள்ளார். நாராயண நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்கள், சரோஜாதேவி வீட்டுக்கு வந்து கண்களை எடுத்துச் சென்றனர்.