| ADDED : ஏப் 21, 2025 06:32 AM
சென்னை : 'முதல்வர் தலைமையில் நடந்த பல்கலைகளின் துணைவேந்தர்கள் கூட்டம், பயனற்ற ஏமாற்றம் அளிக்கும் கூட்டம்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்துள்ளது. உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் எனக் கூறிவிட்டு, உயர் கல்வி மேம்பாடு குறித்து வாய் திறக்காதது, கூட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விட்டது.சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உட்பட பெரும்பாலான பல்கலைகள், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத அவலநிலை நீடிக்கிறது. கிட்டத்தட்ட 75 சதவீதம் ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.பல பல்கலைகளில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு கண்டால்தான், உயர் கல்வி உயரத்தில் இருக்கும். இதற்கு தீர்வு காணாமல், உலகத்தரம் வாய்ந்த கல்வி குறித்து பேசுவது, போகாத ஊருக்கு வழி தேடுவது.எனவே, பல்கலைகளின் தற்போதைய நிதி நிலைமை குறித்து முதல்வர் ஆராய்ந்து, தேவையான நிதியை பல்கலைகளுக்கு ஒதுக்க வேண்டும். துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட அனைத்து காலியிடங்களையும் நிரப்பி, நிர்வாகத்தை சீரமைக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.