சென்னை: ''விஜய், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவருக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லத் தயாரில்லை,''என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் நேற்று, பல்நோக்கு மருத்துவ மைய பணியை துவக்கி வைத்த, அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:முதல்வர் ஸ்டாலின் டில்லியில் நடந்த 'நிடிஆயோக்' கூட்டத்திற்காக சென்றார். அங்கு, தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் கல்வி நிதியை விடுவித்தல், மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு மாநில நலன்கள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். கொரோனா தொற்று, கருணாநிதி நினைவு நாள், தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பல காரணங்களால், ஏற்கனவே நடந்த 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முதல்வரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இந்த முறை வாய்ப்பு இருந்தது. அதனால் முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது. அதை வலியுறுத்திப் பெறவும், முதல்வர் திட்டமிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார். மற்ற கட்சிகளைப் போல, பா.ஜ.,வோடு கள்ள உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை. முதல்வர் யாருக்கும் பயப்படாதவர். ஆதரித்தாலோ, எதிர்த்தாலோ துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் செய்வார். தி.மு.க., மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து ஆட்சியைத் துறந்த வரலாறு கொண்டது. நெருக்கடி நிலை காலத்தில், மிசா சட்டத்தின் கீழ் கொடுஞ்சிறை அனுபவித்த இயக்கம். அப்போது கூட கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை. ஆனால், நேற்று முளைத்த காளான்கள் எல்லாம், இன்றைக்கு தி.மு.க.,வைப் பார்த்து விமர்சிக்கின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் களத்துக்கு வரட்டும்; அவர்கள் அடிப்பதைக் காட்டிலும் நூறு மடங்கு கூடுதல் வலிமையோடு அடி கொடுப்போம். பிடறி சிலிர்க்கும் விதமாக அடிக்க நாங்கள் தயார். வரும் தேர்தலிலும் தி.மு.க.,விற்கு மகுடம் சூட்ட மக்கள் தயாராகி விட்டனர். நடிகர் விஜய்யின் அறிக்கைகள் கடற்கரையில் கட்டிய மணல் கோட்டை போல தகர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.