விஜயுடன் காங்கிரஸ் தகவல் பிரிவு தலைவர் பேச்சு! கூட்டணியை மாற்றும் சாத்தியம் குறித்து விவாதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சென்னையில் நேற்று த.வெ.க., தலைவர் விஜயை, காங்கிரஸ் தகவல் பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார். கூட்டணி மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து, இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய கூட்டணி
தமிழகத்தில், 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளதால், தற்போதுள்ள கூட்டணியை தக்கவைக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் தி.மு.க., தலைமை முயற்சித்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ், 39 தொகுதிகளையும், ஆட்சியில் பங்கு கேட்டும் கொடி பிடிக்கிறது. தி.மு.க., தரப்பில், 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு, 25 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இம்முறையும் தொகுதிகளை ஒதுக்குவதாக காங்கிரசிடம் தி.மு.க., கூறி வருகிறது. அதை, காங்கிரஸ் தேசிய தலைமை ஏற்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,யும் ராகுலின் ஆலோசகரும், அக்கட்சியின் தகவல் பிரிவு தேசிய தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி, சென்னையில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை, அவரது பட்டினப்பாக்கம் இல்லத்தில் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக, இந்த சந்திப்பு நடந்துள்ளது. தமிழகத்தை போலவே, புதுச்சேரி மற்றும் கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, மற்ற இரண்டு மாநிலங்களிலும் விஜய்க்கு செல்வாக்கு உள்ளது.
தி.மு.க.,விற்கு பயம்
அவரை காங்., கூட்டணிக்கு இழுத்தால், கிறிஸ்துவ சமுதாய ஓட்டுகள் கிடைக்கும். அதை வைத்து, இரு மாநிலங்களிலும் ஆட் சியை பிடித்து விடலாம் என, காங்கிரஸ் கணக்கு போடுகிறது. இதற்காக, விஜயை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்தியை, ராகுல் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு வாயிலாக, தி.மு.க.,விற்கு பயம் காட்டப்பட்டு உள்ளது. 'தமிழகத்தில் த.வெ.க., வுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால், 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' என, காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது. இதற்காக, 125 தொகுதிகள் அடங்கிய பட்டியலும் விஜயிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இருந்து, விஜய் தேர்வு செய்து தரும் 60 தொகுதிகளை ஏற்க தயார் என்றும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கேரளாவில் கூட்டணி ஒப்பந்தத்திற்கும், பிரசாரத்திற்கும் வருவதற்கு ஒப்புக் கொண்டால், தமிழகத்தில் கூட்டணியை உறுதிப்படுத்தலாம் எனவும் விஜயிடம் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தமிழகத்தில் தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, 30 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க.,வால் எந்த பயனும் இல்லை.
விஜய்க்கு ராகுல் துாது
அதே நேரத்தில், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால், அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என, ராகுல் கணக்கு போடுகிறார். இதற்காக, தமிழகத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு ராகுல் வந்து விட்டார். இதற்காகவே, ராகுல் தரப்பில் விஜய்க்கு துாது அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
த.வெ.க.,வில் நாஞ்சில் சம்பத்
ம.தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், கொள்கை பரப்பு செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைவிற்கு பின், தி.மு.க., மேடைகளில் அக்கட்சிக்கு ஆதரவாக பேசி வந்தார். இந்நிலையில் நேற்று அவர் விஜயை சந்தித்து, த.வெ.க.,வில் சேர்ந்தார்.