சென்னை: த.வெ.க., நாமக்கல் மாவட்டச் செயலர் சதீஷ்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. த.வெ.க., தலைவர் விஜய் கடந்த செப்., 27ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் பங்கேற்ற சிலர், அப்பகுதியில் உள்ள டாக்டர் லட்சுமணன் பன்னோக்கு மருத்துவமனையில் இருந்த எல்.இ.டி., போர்டு, 'சிசிடிவி' போன்ற பொருட்க ளை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார், த.வெ.க., மாவட்டச் செயலர் என்.சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவில், 'மருத்துவமனை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சில், இவ்விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்வதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சேதத்துக்கான இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''மனுதாரர் தான் இந்த சம்பவத்துக்கு பொறுப்பு. மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார். இதை ஏற்ற நீதிபதி, மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ., 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், அதுவரை வழக்கில், இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.