அவதுாறு வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் பிடி வாரண்ட்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசிய வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது அவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து அவதுாறாக பேசியதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், கஞ்சனுார் போலீசில் புகார் செய்தார்.இந்த வழக்கு கடந்தாண்டு அக். 18ம் தேதி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் கோர்ட்டில் ஆஜரானார். அதன்பின் இரு முறை நடந்த வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை. 'ஒத்தி வைக்கப்பட்ட இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன், அந்த மனுவை தள்ளுபடி செய்து, சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.