''பணிச்சுமையால ஊழியர்கள் படாதபாடு படுறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''தமிழக வணிகவரித் துறையில உதவியாளர், தட்டச்சர்னு கீழ்நிலை ஊழியர் பணியிடங்கள் ஏராளமா காலியா கிடக்கு துங்க... அதுபோல, பதவி உயர்வுல போன ஊழியர்களின் பணியிடங்களையும் நிரப்பாமலே விட்டிருக்காங்க...''தமிழகத்தின் எல்லா மண்டலங்களிலும் நிலவரம் இப்படித்தான் இருக்குது... இதனால, இருக்கிற ஊழியர்கள் கடும் பணிச்சுமையால திணறுறாங்க... சில நேரம், 'வேலைகளை முடிக்கணும்'னு, ஞாயிறு விடுமுறை நாட்கள்ல கூட பணிக்கு வரும்படி, உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துறாங்க...''இதனால, பல ஊழியர்கள் உடல்நலனும் பாதிக்கப்படுதுங்க... 'காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கணும்'னு எல்லாரும் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சேர்மனையே மதிக்க மாட்டேங்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றிய ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... ஊராட்சியில என்ன பணி நடந்தாலும், இவங்களை, 'கவனிச்சா' தான் பில்களை பாஸ் பண்ணுவாங்க பா...''அதுவும் இல்லாம, ஊராட்சிகளின் செயலர் கள், மாசா மாசம், இவங்களுக்கு கப்பம் கட்டணும்... இல்லன்னா, அவங்களை உண்டு, இல்லன்னு பண்ணிடுவாங்க பா...''சமீபத்துல மகளிர் தினம் கொண்டாடுனாங்களே... அப்ப, ஒன்றிய பெண் ஊழியர்கள் எல்லாம், 'ஒரே மாதிரி டிரஸ் அணிஞ்சிட்டு வரட்டுமா'ன்னு கேட்டதுக்கு, 'அப்படி டிரஸ் பண்ணி, யாரை மயக்க போறீங்க'ன்னு கேட்டு, அதிர்ச்சியடைய வச்சிருக்காங்க பா...''அதாவது பரவாயில்லை... பெண் சேர்மனே, 'மகளிர் தின விழாவை சிறப்பா கொண்டாடுவோம்'னு கேட்டதுக்கு, 'எனக்கெல்லாம் அதுல விருப்பமில்லை... நீங்க வேணும்னா கொண்டாடுங்க'ன்னு, வெடுக்குன்னு சொல்லிட்டு போயிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, 'வேதா சிஸ்டர்... சாயந்தரமா கால் பண்றேனே...'' என கூறி வைத்தார்.''மக்கள் வரிப்பணத்தை வீணாக்குதார்னு புலம்புதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''திருநெல்வேலி மாநகராட்சியில முக்கிய புள்ளியா இருக்கிறவர் மேல, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே கடும் அதிருப்தியில இருக்காவ... முக்கிய புள்ளியை மாத்த எவ்வளவோ போராடியும், நடக்கல வே...''இந்த சூழல்ல, 'மாநகராட்சி பாலங்கள், பொது சுவர்கள்ல ஓவியங்கள் வரைய, 2 கோடியும், ஏதாவது ஒரு குளத்துல படகு குழாம் அமைக்க 2 கோடி ரூபாயும் பொது நிதியில இருந்து ஒதுக்கப்படும்'னு, முக்கிய புள்ளி, சமீபத்துல நடந்த மன்ற கூட்டத்துல அறிவிச்சிருக்காரு வே...''ஏற்கனவே, டவுன் நயினார்குளத்துல படகு குழாம் அமைக்கிறோம்னு சொல்லி, பல வருஷங்களுக்கு முன்னாடியே பல லட்சத்தை பாழடிச்சாவ... நீண்ட நாளா கிடப்புல கிடக்கிற வண்ணாரப் பேட்டை தெற்கு பைபாஸ் -- முருகன்குறிச்சி இணைப்பு சாலை திட்டம் உட்பட மாநகராட்சி ஏரியாக்கள்ல நிறைய வளர்ச்சி பணிகள் பெண்டிங்குல கிடக்கு வே...''இதனால, 'இந்த 4 கோடி ரூபாயை அந்த மாதிரி திட்டங்களுக்கு பயன்படுத்தாம, ஓவியம் வரையுதேன், படகு ஓட்டுதேன்னு வெட்டியா செலவழிக்கணுமா'ன்னு கவுன்சிலர்கள் புலம்புதாவ... 'லோக்சபா தேர்தல் முடிஞ்சதும், முக்கிய புள்ளிக்கு கல்தா தந்துடு வாங்க'ன்னும் பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.