உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ளோம் நிர்வாகிகள் கூட்டத்தில் பழனிசாமி ஒப்புதல்

15 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ளோம் நிர்வாகிகள் கூட்டத்தில் பழனிசாமி ஒப்புதல்

சென்னை:''வயது முதிர்ந்த தொண்டர்களின் இறப்பால், 10 முதல் 15 சதவீத ஓட்டுகளை இழந்துள்ளோம். இதை சரி செய்ய, இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அமைத்துள்ள, எல்.இ.டி., விளம்பரப் பலகையை திறந்து வைத்தார். கூட்டத்தில், அவர் பேசியதாவது:தமிழகத்தில் அதிக ஊடகங்கள் உருவாக, நம் ஆட்சி காரணமாக இருந்தது. ஆனால், அவர்கள் நன்றி மறந்து, நம் நெஞ்சிலேயே குத்துகின்றனர். குடிநீர் பற்றாக்குறை இருந்தபோது, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஜோலார்பேட்டை போன்ற இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, சென்னையில் வினியோகித்தோம். டெல்டாவை புயல் புரட்டி போட்டது. புயலை விட வேகமாக, நிவாரணப் பணி செய்தோம்.கொரோனால் 11 மாதங்கள் அரசே ஸ்தம்பித்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில், மருத்துவத் துறையில் சிறப்பாக பணி செய்தோம். இதெல்லாம் வரலாறு. அமெரிக்காவில்கூட நம்மைப் போல் கொரோனா தடுப்பு பணிகளை செய்ய முடியவில்லை. அப்போது, மதுக்கடைகளை மூடியதால், ஓராண்டு அரசுக்கு வருமானமே இல்லை. அரசு நிதியில் இருந்து 40,000 கோடி ரூபாய் எடுத்து செலவு செய்தோம். அ.தி.மு.க., அரசு ஏழைகளின் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொடுத்து, 3,160 மாணவர்களை மருத்துவராக்கினோம். நாம் கட்டிய பாலங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டி, தி.மு.க., அவற்றை திறந்து கொண்டிருக்கிறது. மாநிலத் தலைமை கேட்கும் விபரங்களை, ஐ.டி., பிரிவு நிர்வாகிகள், உடனுக்குடன் அனுப்ப வேண்டும். நீங்கள் 'யூ டியூப்' சேனல்களை உருவாக்கி, அ.தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிடுங்கள். யாருக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்; தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கூடாது. நம் இலக்கு 2026தான் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். மாவட்டச்செயலர்கள் திருமணத்திற்கு போய் தாலி எடுத்து கொடுப்பதை எல்லாம், நீங்கள் பதிவு போட வேண்டாம். அதை எல்லாம் மக்கள் விரும்ப மாட்டார்கள். இளைஞர்கள் விருப்பப்படி நீங்கள் செயல்படுங்கள். அ.தி.மு.க.,வின் ஓட்டு 10 முதல் 15 சதவீதம் குறைந்து விட்டது. கட்சியின் வயது முதிர்ந்த தொண்டர்கள் இறந்ததால், கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். நாம் இழந்த ஓட்டுகளை பெற, இளைஞர்களை நோக்கி அ.தி.மு.க.,வை கொண்டு செல்ல வேண்டும். அதற்காக, அதிக அளவில் கட்சியில், புதிய இளைஞர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

வீசப்பட்ட மொபைல்போன்: தவறி விழுந்ததா... வீசப்பட்டதா?

கட்சி தலைமை அலுவலகத்தில், எல்.இ.டி., விளம்பரப் பலகையை, பழனிசாமி துவக்கி வைத்த போது, அவர் கழுத்தில் மொபைல் போன் ஒன்று வந்து விழுந்தது. யாரோ செல்போனை வீசியது போல இருந்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், பழனிசாமி அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், அலுவலகம் உள்ளே சென்றார்.இது குறித்து, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் ராஜ்சத்யன் கூறுகையில், ''தொண்டர் ஒருவர் தன் மொபைல் போனில் படம் பிடித்தார். அப்போது மற்றொரு தொண்டர் கையை மேலே துாக்கியபோது, அது தவறி போய் பழனிசாமி மீது விழுந்து விட்டது. இதிலும் அரசியல் செய்யும் நோக்கத்துடன், சிலர் பழனிசாமியை நோக்கி தொண்டர் ஒருவர் செல்போன் எறிந்தது போல தகவல் பரப்புகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை