உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா தவறாக பயன்படாது என நம்புகிறோம்: ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் நம்பிக்கை

முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா தவறாக பயன்படாது என நம்புகிறோம்: ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் நம்பிக்கை

கோவை; கோவையில் நேற்று நடந்த, 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு - 2025' நிகழ்வில், ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நர லோகேஷ் கூறியதாவது: ஒரு நல்ல தலைவரால், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். தேசத்தை வழிநடத்தும் திறமைமிக்க தலைவராக, பிரதமர் மோடியை பார்க்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த துணை ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கிறோம். சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை. அவரின் இரு கண்களும் ஆந்திர வளர்ச்சியில் உள்ளது. 2029 மட்டுமல்ல; அதற்குப் பிறகும் தேசிய ஜனநாயக கூட்டணியை தெலுங்குதேசம் ஆதரிக்கும். பா.ஜ.,வுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படின், அதை சுமுகமாக தீர்ப்போம். இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது. நாட்டை வழிநடத்தும் அரசியல்வாதிகள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். பொருளாதாரம் அதிகரிக்கும்போது, ஊழல் அதிகரிக்கும். குற்ற வழக்கில் சிக்கி, 30 நாட்கள் சிறை செல்லும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட வரைவு, தவறாக பயன்படுத்தப்படாது என நம்புகிறோம்; அதை வரவேற்கிறோம். ஒரு கல்வி அமைச்சராக, குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

'தமிழை அழிக்க தி.மு.க., நினைக்கிறது'

திராவிடத்துக்கு எந்தவொரு மொழியும் கிடையாது. தி.மு.க.,வினர் திராவிடம், தமிழ் குறித்து பேசுகின்றனர். இவ்விரண்டுக்குமே தி.மு.க.,வினர் உண்மையாக இல்லை. தி.மு.க., தமிழை அழிக்க நினைக்கிறது; இதுவரை தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறிவிட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காங்., ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியாவில் இருந்த தேசியத்தை பா.ஜ., மீட்டெடுத்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் அதை செய்யவில்லை. தி.மு.க.,வுக்கு தேசியத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் ஆகிய மூன்றையும் முன்னெடுப்பதே பா.ஜ.,வின் உண்மையான நோக்கம். - குருமூர்த்தி, ஆசிரியர், துக்ளக்

மத்திய அரசுக்கு பெரியண்ணன் மனப்பாங்கு:

ஜி.எஸ்.டி., அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு 5 ஆயிரம் கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தின் வருவாயில் பெரும் பகுதி, ஜி.எஸ்.டி.,யில் இருந்து கிடைக்கிறது. இப்போது திடீரென வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது. ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்கள் ஓட்டளிக்கலாம் என மத்திய நிதியமைச்சர் கூறுகிறார். முடிவெடுத்த பின், ஒப்புதலுக்காகவே கவுன்சில் கூட்டப்படுகிறது. முடிவெடுக்கும் முன், மாநிலங்களிடம் ஆலோசிக்கலாம். நிதி பகிர்வில் மத்திய அரசு, பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்கிறது. நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை. நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம். தங்கம் தென்னரசு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை