அரசு கையகப்படுத்திய நிலங்களை விடுவிக்க வருவோம்; யாரும் சிபாரிசு தேடி அலைய வேண்டாம்! அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
சென்னை:''இழப்பீடு செலுத்தப்பட்ட 5,000 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதற்கான உத்தரவுகள், ஜூனில் பிறப்பிக்கப்படும். கையகப்படுத்த வீடு தேடி வருவோம்; சிபாரிசு தேடி அலையாதீர்கள்,'' என, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்து உள்ளார். அவர் அளித்த பேட்டி: எதிர்கால தேவைகளுக்காக, பல்வேறு மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, வீட்டுவசதி வாரியம் கடந்த காலங்களில் மேற்கொண்டது. இதில் பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை, ஐந்து பிரிவாக வகைப்படுத்தி இருக்கிறோம். விரைவில்
இதில் அறிவிப்பு மற்றும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என, முதல் இரண்டு பிரிவுகளில், 5,000 ஏக்கர் நிலங்கள் முடங்கின. இந்த நிலங்களை, அதன் உரிமையாளர்கள், பல்வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். இதை வாங்கியவர்கள், வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதில் எங்களுக்கு தேவைப்படாத நிலங்களை விடுவிக்க முடிவு செய்து, சில மாதங்களுக்கு முன் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக, 1,500 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. மேலும், 1,800 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதற்கான உத்தரவுகள் தயாராகி வருகின்றன. விரைவில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இதையடுத்து, இழப்பீட்டு தொகை செலுத்தியது, இழப்பீடு தொடர்பான வழக்கு உள்ள நிலங்களை, மூன்று, நான்காவது பிரிவுகளில் சேர்த்துள்ளோம். இந்த நிலங்களில் இழப்பீடு தொகை செலுத்தவும், இதர வகையிலும் வாரியம் செலவு செய்துள்ளது. இதில் வாரியம் செலவு செய்த தொகை மற்றும் அந்த நிலங்களில் சாலை, ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் ஆகியவற்றுக்கான கட்டணங்களை, வட்டியுடன் வசூலிக்க வேண்டும். அந்த நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் யார்; அவர்களிடம் இருந்து எவ்வளவு தொகையை வசூலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தகவல் வரும்
இக்குழு, ஏப்ரல் மாத இறுதிக்குள் பரிந்துரைகளை அளிக்கும். அதன் அடிப்படையில், 5,000 ஏக்கர் நிலங்களை விடுவிப்பது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். எனவே, நில உரிமையாளர்கள் யாரும், சிபாரிசு தேடி அலைய வேண்டாம்; உங்கள் நிலத்தை விடுவிப்பதற்கான தகவல் வீடு தேடி வரும். அடுத்தபடியாக, ஐந்தாவது நிலையில் வகைப்படுத்தப்பட்ட நிலங்கள், வாரியங்கள் கையகப்படுத்தியவை. இந்த நிலங்கள், இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்களை வெளியேற்ற முடியாத நிலையில், நிலத்துக்கான தொகையை தற்போதைய நிலவரம் அடிப்படையில் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான தொகையை அவர்கள் செலுத்தினால், நில உரிமை ஒப்படைப்பு செய்யப்படும்.விற்பனையாகாத வீடுகளை, பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இதற்கான கோப்புகள், செய்தி துறை வாயிலாக வர வேண்டும். வாரிய ஒதுக்கீட்டாளர்களில், 95 சதவீதம் பேருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு விட்டது. எஞ்சிய 5 சதவீதம் பேருக்கு வழங்குவதில், ஒதுக்கீட்டாளர்கள் தரப்பில் உரிய ஆவணங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா உடன் இருந்தனர்.