பிரதமரை சந்தித்து தீர்மானங்களை அளிப்போம்!
சென்னை: “லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, பிரதமர் மோடியிடம் நேரில் வழங்குவோம்,” என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்.அவர் அளித்த பேட்டி:மாநில அரசுகள், அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசித்த பிறகே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து, எந்த முடிவையும் எடுக்க வேண்டும். இது, மாநில உரிமைக்கான போராட்டம். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தென்மாநிலங்களுக்கு தொகுதிகளை குறைத்து, தண்டனை வழங்கி விடக்கூடாது என்பதே, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரின் கருத்தாக இருந்தது.தொகுதி சீரமைப்பை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தீர்மானங்களை வழங்குவோம்.தமிழக பா.ஜ., மட்டுமல்ல, மத்திய பா.ஜ., அரசும் தமிழகத்திற்கு எதிராக, தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலேயே செயல்படுகிறது. தமிழகத்தின் உரிமைக்கான போராட்டத்தை, தமிழக பா.ஜ., எதிர்க்கிறது. அவர்களின் கருத்தை, தமிழக மக்கள் புறக்கணித்து விட்டனர்.இவ்வாறு கனிமொழி கூறினார்.