கடலில் இன்று உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதேபோல, மியான்மர் கரைக்கு அப்பால், வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த இரு சுழற்சிகளின் தாக்கத்தால், மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்; இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை, 28 வரை தொடரவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.4 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, துாத்துக்குடியில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.7 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெயில் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை ஆகிய இடங்களிலும் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.