மதுரை : அ.தி.மு.க., சண்டை, மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்தனர். அதேநேரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியோ, “எவ்வளவு சோதனை வந்தாலும் எதிர்ப்பேன். பன்னீர், செங்கோட்டையன், தினகரன் ஆகியோர், தி.மு.க.,வின் பி டீம்,” என்று கொந்தளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியில் இருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். மீண்டும் கட்சியில் இணைய விரும்பிய அவரை சேர்க்க, பழனிசாமி முன்வரவில்லை. நம்பியிருந்த பா.ஜ., தலைமையும் கைவிட்ட நிலையில், அரசியலில் பன்னீர் தனித்து விடப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d2057fj5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்து, தன்னுடன் இணக்கமாக செல்லாத மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனையும் பழனிசாமி ஓரம் கட்டினார். கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குரல் எழுப்பியதை தொடர்ந்து, அவரது கட்சி பதவிகளையும், ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து, அதிரடி காட்டினார் பழனிசாமி. பழனிசாமியால் தனித்து விடப்பட்ட செங்கோட்டையன், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். இதற்கான நிகழ்வாக, தேவர் குருபூஜை அமைந்தது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் இரவே செங்கோட்டையன் மதுரை வந்தார். தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று காலை மதுரை வந்த பன்னீர்செல்வம் சந்தித்தார். பின், தேவர் குருபூஜையில் பங்கேற்க, இருவரும் ஒரே காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்றனர். பசும்பொன் அடுத்த நெடுங்குளம் கிராமம் அருகே இருவரும் காத்திருந்தனர். அங்கு தினகரன் வந்து சேர்ந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சசிகலாவை, அவர்களால் வரவேற்க முடியவில்லை. எனவே, சசிகலா தவிர மற்ற மூன்று பேரும், பசும்பொன் கிராமம் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தாமதமாக அங்கு வந்த சசிகலாவை சந்தித்தனர். தேவர் குருபூஜையில் சந்தித்துக் கொண்ட மூவரும், அரசியலில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். இதை அறிந்ததும் கோபமான பழனிசாமி, “எவ்வளவு சோதனை வந்தாலும் எதிர்ப்பேன். தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர், தி.மு.க.,வின் 'பி டீம்' ஆக செயல்படுகின்றனர்,” என கொந்தளித்தார். இதுகுறித்து, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “எங்களை, 'பி டீம்' என சொல்லும் பழனிசாமி, தி.மு.க.,வின், 'ஏ1 டீம்' ஆக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் நிழலில் அரசியல் செய்து வருகிறார்,” என்றார். இதற்கிடையே தேர்தல் நெருங்குவதால், பன்னீர்செல்வம் புதிய கட்சி துவக்க திட்டமிட்டு, தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகியோரை, அ.தி.மு.க.,வில் சேர்க்க மறுத்தால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அ.தி.மு.க,வில் மீண்டும் சண்டை களைகட்ட துவங்கி உள்ளது. 'த.வெ.க.,வுடன் பேசவில்லை' அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை; அவர்களும் எங்களுடன் பேச்சு நடத்தவில்லை. அ.தி.மு.க., கூட்டத்தில், த.வெ.க., கொடி காட்டியதற்காக, தொண்டர்கள் பிள்ளையார் சுழி போட்டதாக சொன்னேன். எங்கள் கட்சி கூட்டத்திற்கு விருந்தாளி போல வந்தவர்கள், த.வெ.க., தொண்டர்கள். அவர்களை வேண்டாம் என சொல்ல முடியுமா? - பழனிசாமி பொதுச்செயலர் அ.தி.மு.க., “துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டு விட்டனர். களைகள் அகற்றப்பட்டு, அ.தி.மு.க., செழித்து வளரும்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: நான் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாகவும், தினமும் பொய்யான அறிக்கையை வெளியிட்டு வருவதாகவும், அவதுாறு கருத்துக்களை கூறி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான், அக்., 21ல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தேன். அங்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், 15 நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் இருந்தன. தினசரி, 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. இதை எடுத்துக் கூறினால், அவதுாறு பரப்புவதாக முதல்வர் கூறுகிறார். உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில், 2022- - 23ம் ஆண்டு 29.48 லட்சம் டன்; 2023 - -24-ல் 29.46 லட்சம்; 2024 - -25ல் 28.26 லட்சம்; 2025-- 26-ல் 28.30 லட்சம் டன் என, மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து, 49,000 டன் நெல் மட்டுமே, தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டுதோறும், 42.5 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளதாக, முதல்வர் பொய்யான தகவலை கூறி வருகிறார். சென்னையில், பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகேயுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்ற பயத்தில், வாக்காளர் திருத்தப்பணி மேற்கொள்ளக்கூடாது என, தி.மு.க., எதிர்க்கிறது. செங்கோட்டையன், தினகரன், பன்னீர்செல்வம் ஒன்று சேர்ந்து பேசியது, ஏற்கனவே அவர்கள் போட்ட திட்டம் தான். இப்படிப்பட்டவர்களின் துரோகத்தால் தான், கடந்த முறை அ.தி.மு.க., வீழ்த்தப்பட்டது. செங்கோட்டையன் குழி பறித்ததால் தான், அந்தியூர் தொகுதியில், அ.தி.மு.க., ஜெயிக்க முடியவில்லை. மூவரும் ஒன்றிணைவதால், அ.தி.மு.க.,வுக்கு எந்த பலவீனமும் இல்லை. செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில், எந்த தயக்கமும் இல்லை. மூவரும் ஒன்றிணைந்து பேசியது எதற்கும் உதவாது. தி.மு.க.,வின் 'பி டீம்' ஆக செயல்படுகின்றனர். துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டு விட்டனர். எனவே களைகள் அகற்றப்பட்டு, அ.தி.மு.க., செழித்து வளரும். இவ்வாறு அவர் கூறினார். எல்லாமே 'சர்ப்ரைஸ்' சசிகலா 'சஸ்பென்ஸ்' “நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள். 'சர்ப்பைரஸ்' ஆக எல்லாமே நடக்கும். அ.தி.மு.க., அட்சியை மீண்டும் கொண்டு வருவேன்,” என, சசிகலா கூறினார். அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நான் எல்லாரையும் சந்திப்பேன். எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும்? அ.தி.மு.க., பழைய நிலைக்கு திரும்பும். யார் துரோகி என அ.தி.மு.க., தொண்டர்களிடம் கேட்டால் தெரியும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இது இரண்டாவது முறை நடக்கும் பிரச்னை. நிச்சயம் சரிசெய்வேன். கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை, ஏற்கனவே தொடங்கி விட்டேன். அரசியலில் எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்வது, என் பழக்கம் இல்லை. என்னைப் பற்றி, 'சீனியர் லீடர்'களுக்கு தெரியும். ஜெயலலிதாவை திட்டியவர்களை கூட, நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகராகவும் ஆக்கி உள்ளோம். என், 'மூவ்' தனியாக தான் இருக்கும்; ஆனால், அது தனியாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.