உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் கட்சிகளின் கருத்து என்ன: ஐகோர்ட் கேள்வி

கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் கட்சிகளின் கருத்து என்ன: ஐகோர்ட் கேள்வி

மதுரை:கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில், அதில் இணைந்து இடையீட்டு மனு தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப்பில், அ.தி.மு.க., கொடிக்கம்பம் நட அனுமதிக்க உத்தரவிடக்கோரி, அதன் நிர்வாகி கதிரவன் மனு தாக்கல் செய்தார். ஜன., 27ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜூன் 20ல் நீதிபதி சி.சரவணன் இந்த வழக்கை விசாரித்தனர். இவ்வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள அ.தி.மு.க., - ம.தி.மு.க., -- இந்திய கம்யூ., - த.வெ.க., உள்ளிட்ட சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இதை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சவுந்தர் அமர்வு, 'இவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து அறிய வேண்டியுள்ளது' என்றது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் கூறுகையில், ''இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அரசு அறிய விரும்புகிறது. அதை பரிசீலித்து, அதன் பின், இதை ஒழுங்குபடுத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்,'' என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகள், தங்கள் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக, ஆக., 12க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், அரசின் நிலைப்பாடு குறித்து கருத்து கோரப்படும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !