சென்னை: 'வெளிநாட்டினரை மற்ற சிறை கைதிகளுடன் சமமாக நடத்துவதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை வகுப்பது தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த விசாரணை கைதி எக்விம் கிங்ஸ்ட்லி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 'அடிப்படை வசதிகளின்றி, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளை, அங்கிருந்து மாற்ற வேண்டும். வெளிநாட்டு சிறை கைதிகளை மோசமாக நடத்திய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, ''வெளிநாட்டு கைதிகளுக்கு, டிசம்பர் முதல் காலை உணவு வழங்கப்படுவதில்லை,'' என்று, குற்றம்சாட்டினார்.காவல் துறை தரப்பில், 'உள்நாட்டு சிறை கைதிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சிறை கைதிகளுக்கும் உணவு, மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது உறுதி செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''வெளிநாட்டு சிறை கைதிகளை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக விதிகள் இல்லை. அதை வகுப்பது தொடர்பாக, உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன். சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகளிடம், வீடியோ அழைப்பில் பேசுவது தொடர்பாக, துாதரகம், வெளியுறவு துறை தான் முடிவெடுக்க முடியும் என்பதால், அது குறித்தும் விளக்கம் பெற்று தெரிவிக்க, இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்,'' என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், 'வெளிநாட்டு சிறை கைதிகளுக்கான அடிப்படை தேவைகள் மறுக்கப்படக்கூடாது. மனிதத் தன்மையுடன் அவர்களை நடத்த வேண்டும். இங்குள்ள வெளிநாட்டு சிறை கைதிகளை, நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்து தான், அவர்களது நாட்டில் நம் நாடு குறித்து மதிப்பிடப்படும்' என்று தெரிவித்தனர்.மேலும், வெளிநாட்டினரை மற்ற சிறைக்கைதிகளுடன் சமமாக நடத்துவதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை வகுப்பது தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க, இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்தனர்.