உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவிலுக்குள் நுழைந்த யானை இறந்ததன் காரணம் என்ன? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

கோவிலுக்குள் நுழைந்த யானை இறந்ததன் காரணம் என்ன? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

சென்னை: 'கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் நுழைந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக வனத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், அக்டோபர் முதல் வாரத்தில் திடீரென காட்டு யானை ஒன்று நுழைந்தது. கோவிலுக்குள் யானை நுழைந்த காட்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்க ளில் வெளியாகின. கோவிலுக்குள் உலாவிய இந்த யானை, இரண்டு நாட்களில் இறந்துள்ளது. யானை இறந்ததற்கான காரணம், இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இறந்த யானையின் உறுப்புகளை, தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பவில்லை. இறப்பு குறித்து தெரியப்படுத்தாமல், பிரேத பரிசோதனை செய்து விட்டு, வனத்துறை புதைத்து விட்டதாக, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையீடு செய்தார். இதை யடுத்து நீதிபதிகள், 'ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்க்கும் போது, கோவிலுக்குள் நுழைந்த போது, அந்த யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிகிறது. 'யானை இறந்ததற்கான காரணம் குறித்த விபரங்களுடன், பிரேத பரிசோதனை அறிக்கையை, வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர். விசாரணையை நவ., 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ