உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பாவு பேச்சால் என்ன களங்கம்? அ.தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் கேள்வி!

அப்பாவு பேச்சால் என்ன களங்கம்? அ.தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் கேள்வி!

சென்னை : 'சபாநாயகர் அப்பாவு பேச்சால், அ.தி.மு.க.,வுக்கு எப்படி களங்கம் ஏற்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது, முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் சேர தயாராக இருந்ததாகவும், அதை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ரத்து செய்ய

அவரது பேச்சு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி, அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆர்.எம்.பாபுமுருகவேல், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகி உள்ளார்.இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவும், விசாரணை முடியும் வரை தடை விதிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.சபாநாயகர் அப்பாவு சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் ஆஜராகி, 'வழக்கு தொடுத்தவருக்கு எதிராக, அப்பாவு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்பாவுவின் பேச்சு, அரசியல் கட்சியை அவதுாறு செய்ததாக கூற முடியாது.'கட்சி சார்பில் என்றால், அதன் தலைவர் அல்லது பொதுச்செயலர் தான், அப்பாவுக்கு எதிராக அவதுாறு வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனவே, அவதுாறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.பாபுமுருகவேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கட்சி சார்பில் அவதுாறு வழக்கு தொடருவதற்கான அங்கீகாரத்தை கட்சி அளித்துள்ளது' என்றார்.

கட்சி தாவவில்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'பாபு முருகவேல், அவதுாறு வழக்கு தாக்கல் செய்ய, என்ன உரிமை உள்ளது; 40 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரும் வழக்கு தொடரவில்லை. அப்பாவு பேச்சில், யார் பெயரையும் குறிப்பிடவில்லை' என்றார்.மேலும், 'கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கருதக் கூடாது. ஐந்து ஆண்டு பதவி காலத்தை, அ.தி.மு.க., பூர்த்தி செய்தது. யாரும் கட்சி தாவவில்லை. அப்பாவு பேச்சால் எப்படி அ.தி.மு.க.,வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது; இது எப்படி அவதுாறாகும்' என கேட்டார்.அதைத்தொடர்ந்து, மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி பாபு முருகவேலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
அக் 18, 2024 16:42

சபாநாயகர் என்பதை மறந்து தீ. ஆறுமுகம் ஸ்டைலில் பேசுவதை கோர்ட் கண்டிக்க வேண்டும். நடுநிலை என்றாலென்ன என்பதை நினைவுபடுத்த வேண்டும்.


sridhar
அக் 18, 2024 12:30

பொது நீதி என்றில்லாமல் ஆளுக்கு ஏற்ற நீதி . அரசியல்வாதிக்கு சலுகை, பணக்காரர்களுக்கு சலுகை, பெண்ணுக்கு சலுகை , மைனாரிட்டிக்கு சலுகை , குறிப்பிட்ட ஜாதிகளுக்கு சலுகை … மற்றவர்கள் எல்லாம் வீணானவர்கள் .


Ramesh Sargam
அக் 18, 2024 12:18

அப்பாவுவிடம் ஆதாரம் இருக்கிறதா என்று நீதிமன்றம் அவரிடமும் கேள்வி கேட்டிருக்கவேண்டும். ஒருதலை பட்சமாக அதிமுகவிடம் கேள்வி கேட்பது சரியல்ல.


Anand
அக் 18, 2024 11:49

அதிமுக கேஸ் போட்டது செல்லாது என்றால் தள்ளுபடி செய்ய வேண்டியது தானே? அதைவிடுத்து தேவையில்லாமல் கேள்வி கேட்கிறேன் பேர்வழி என அதிக பிரசங்கி தனமாக இருநூறு ரூவா அடிமையை விட கேவலமாக...


RAMAKRISHNAN NATESAN
அக் 18, 2024 09:51

டீம்காவின் காலடியில் கிடக்கின்றன ........


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 18, 2024 08:10

இதே நீதிமன்றம் மகாவிஷ்ணு பேச்சில் என்ன குற்றம் கண்டு பிடித்தது. யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது....அவரை ஒரு தீவிரவாதியை போல 200 போலிஸார் கொண்டு விமானநிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ....இதையெல்லாம் கோர்ட் கேள்வி கேட்காதா...???


Iniyan
அக் 18, 2024 07:21

நீதிமன்றங்கள் தி மு க கைத்தடிகள்


Lion Drsekar
அக் 18, 2024 06:57

உப்பு சப்பில்லாத பேச்சுக்கே கால விரயம் நடக்கும் இக்காலத்தில், மக்களுக்காக சேவைசெய்யவேண்டியவர்கள் தவறும் நேரத்தில், வாழ்வாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்புக்கு என்ன வழி என்று யாருமே வாய்திறக்காமல் இருபபது வருத்தம் அளிக்கிறது , நீதிமன்றம் தானாக முன்வந்தால் மட்டுமே விடியல் பிறக்கும், வந்தே மாதரம்


சம்பா
அக் 18, 2024 06:13

முன்பு நீதிமன்றம் இருந்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை