உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே அமைச்சர் சொல்வது பொய்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

ரயில்வே அமைச்சர் சொல்வது பொய்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

சென்னை: 'மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடுமாறு, தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்அவரது அறிக்கை: மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு, புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசு கோரியதாகவும், அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி.தமிழக அரசு ஒருபோதும், எந்த விதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.இந்த புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி, 926 ஹெக்டேர் நிலம் எடுப்பு செய்து, ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு, மதுரை, விருதுநகர், துாத்துக்குடி கலெக்டர்களிடம் கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழக அரசு ஆணையிட்டது. மேலும், இந்த திட்டம் உள்ளிட்ட பிற ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு, கடந்த ஆண்டு ஆக., 19ம் தேதி முதல்வர், ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டார்.அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில்-, தமிழக அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என, மத்திய அமைச்சரே பொறுப்பற்ற முறையில் பேசலாமா? இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, விருதுநகர், மதுரை மற்றும் துாத்துக்குடி ஆகிய கலெக்டர்களால், ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் பெறப்படவில்லை. அந்த கடித விபரங்களாவது ரயில்வே அமைச்சருக்கு தெரியுமா?தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கை கேட்கப்பட்டது. அதன்படி, மதுரை - துாத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தில், மீளவிட்டான் - மேலமருதுார் வரை, 18 கி.மீ., அளவில் பணி முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பிரிவுகளுக்கான பணி, குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.எனவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி எந்தவித கடிதமும் எழுதவில்லை; வாய்மொழியாகவோ தமிழக அரசால் ரயில்வே துறைக்கு எதுவும் சொல்லப்படவில்லை; மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே, தமிழக அரசு இதுவரை கோரி வருகிறது.தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை, மத்திய அமைச்சரே வெளியிடலாமா? முதல்வரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜன 12, 2025 12:34

மத்திய ரயில்வே அமைச்சருக்கு மட்டுமே அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, பச்சைப்பொய் சொல்ல அதிகாரம் உண்டு, மாநில அமைச்சர்களுக்கு கிடையாது!


Shekar
ஜன 12, 2025 09:21

நேத்துதான் விடியலார் அவையில் நீட் நாங்க ஒழிப்போம்னு சொல்லல, ராகுல்காந்தி வந்தா ஒழிப்போம் சொன்னோம், என்று பொன் மொழி உதிர்தார். மன்னன் எவ்வழியோ அமைச்சனும் அவ்வழி.


Mani . V
ஜன 12, 2025 07:02

ஆமா, இவரு அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு. அப்படியே உண்மையை மட்டும்தான் பேசுவாரு. மொத்தக் கூட்டமும் பிராடு கூட்டம். "நீட்"டை ரத்து செய்து விடுவோம் என்று எட்டுக் கோடி தமிழர்களை ஏமாற்றிய மொன்னமாரி கூட்டம்.


கிஜன்
ஜன 12, 2025 01:59

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் ....


சமீபத்திய செய்தி