உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., உறுப்பினர் சேர்க்கைக் குழு நிர்வாகி கமலிகா யார்? காமராஜர் பேத்தி என சொல்லி ஏமாற்றுவதாக சர்ச்சை

காங்., உறுப்பினர் சேர்க்கைக் குழு நிர்வாகி கமலிகா யார்? காமராஜர் பேத்தி என சொல்லி ஏமாற்றுவதாக சர்ச்சை

தமிழக மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கமலிகா, காமராஜர் பேத்தியா, இல்லையா என்ற சர்ச்சை, அக்கட்சியில் வெடித்துள்ளது. தமிழக மகளிர் காங்கிரசில், புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. காமராஜர் பேத்தி என சொல்லப்படுகிற கமலிகா, உறுப்பினர் சேர்க்கை பிரசார குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா பிறப்பித்துள்ளார். இந்நிலையில், 'யார் இந்த கமலிகா... காமராஜர் பேத்தி என்கிறார். அவரது அக்கா, தி.மு.க.,வில் இருக்கிறார். காமராஜரின் ரத்தம், காங்கிரசை விட்டு வேறு கட்சியை பற்றி யோசிக்க முடியுமா? காமராஜரின் பேத்தி என்ற பெயரில் கமலிகா பதவி பெற்று விட்டார்' என, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகின்றன. இது தொடர்பாக, காமராஜரின் கொள்ளுப் பேரன் காமராஜ் கனகவேல் கூறியதாவது:காமராஜரின் பாட்டி பார்வதி, காமராஜரின் அப்பா குமாரசாமி நாடாரை தத்து எடுத்து வளர்த்தார். காமராஜருக்கு உடன் பிறந்தவர் என்றால், தங்கை நாகம்மை மட்டும் தான். காமராஜருக்கு உடன் பிறந்த தம்பி யாரும் கிடையாது. நாகம்மைக்கு நான்கு குழந்தைகள். மூத்த மகள் பெயர் மங்களம். அவருடைய மகன் தான் கனகவேல் காமராஜ்; அதாவது என்னுடைய தந்தை. காமராஜருக்கு கொள்ளி வைத்தவர் அவர் தான். எனவே, அவர் தான் ஹிந்து முறைப்படி காமராஜரின் நேரடி வாரிசாக கருதப்படுகிறார். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தியிடம் நெருக்கமாக இருந்து அரசியல் செய்தவர். மருத்துவக் கல்லுாரி மாணவராக இருந்தபோது காங்கிரசில் சேர்ந்து, அண்ணாதுரை, கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்தார். காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இருக்காது. இருந்தும், எங்க அப்பா, காங்கிரஸ் கட்சியை நம்பி, தன் வாழ்க்கையை தொலைத்து விட்டார். ரத்தவழி உறவு என பார்த்தால், காமராஜருக்கு கமலிகா என்ற பெயரில், எந்த பேத்தியும் கிடையாது. கமலிகா ஒரு முறை எங்களை பார்க்க வந்தார். அவரிடம், 'காமராஜர் பெயரை பயன்படுத்த வேண்டாம்' என, சொல்லி விட்டோம். அதையும் மீறி, காமராஜர் பேத்தி என சொல்லிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.கமலிகா கூறியதாவது:காமராஜரின் தந்தை குமாரசாமியின் தம்பி சங்கரலிங்க நாடார். அவரது மகன் அண்ணாமலை நாடார். அவரது மகள் சந்திரா ராஜாமணி. அவரது மூத்த மகள் மயூரி, தி.மு.க.,வில் உள்ளார். இளைய மகளான நான், 6 ஆண்டுக்கு முன், காங்கிரசில் இணைந்தேன். எனக்கு மாநிலச்செயலர் பதவி வழங்கப்பட்டது.மறைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளை தேடி பிடித்து, வெளி உலகிற்கு அடையாளம் காட்டும் பணியை செய்தேன். தேனியில் மலைவாழ் கிராமங்களை சேர்ந்த ஆயிரம் பேரை காங்கிரசில் இணைய வைத்தேன். இப்பணிக்கு டில்லி மேலிடம் பாராட்டு தெரிவித்துள்ளது. காமராஜர் பேத்தி என பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காமராஜர் குடும்ப உறுப்பினர்கள் பெயர் பட்டியலை எல்லாம் சரிபார்த்து, அதில் காமராஜர் தந்தை குமாரசாமி நாடார் தம்பி சங்கரலிங்க நாடார் என, உளவுத்துறை வாயிலாக விசாரித்த பின்தான், தி.மு.க.,வில் என் அக்கா மயூரி சேர்க்கப்பட்டார். மயூரி, காமராஜரின் பேத்தி என்றால், அவருடைய தங்கையான நான் பேத்தி இல்லையா? காமராஜர் பேத்தி இல்லை என சர்ச்சை கிளப்பி, காங்கிரஸுக்கே சிலர் அவமானத்தை உண்டு பண்ணுகின்றனர். காமராஜரின் பேத்தி என்ற அடையாளம் தான் எனக்கு பெருமை.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ