சென்னை: திருப்பத்தூர் அருகே பள்ளி கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டு இரு வாரங்களாகியும், போலீசார் இந்த வழக்கை மூடிப் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது போல் தெரிவதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை; திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, அரசு நிதி உதவி பெறும் டொமினிக் சேவியர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவர் முகிலன் காணாமல் போன நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, பூட்டப்பட்டிருந்த பள்ளி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், மாணவர் முகிலனின் மர்ம மரணம் தொடர்பாக, இரண்டு வாரங்கள் கடந்தும், இதுவரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாணவர் முகிலன் இறப்பு தொடர்பான வழக்கை, அப்படியே மூடிப் புதைக்கும் பணியில் மாவட்ட போலீசார் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்தும், மாணவர் முகிலன் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும், நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் கைது செய்து, அவர்களில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் விவேகானந்தன் மற்றும் இரண்டு வக்கீல்கள் உள்ளிட்ட மூன்று பேரைச் சிறையில் அடைத்திருக்கிறது போலீசார்.பூட்டியிருந்த கிணற்றில் இருந்து கிடைத்த பள்ளி மாணவனின் உடல் குறித்து இரண்டு வாரங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் போலீசார், விசாரணை கோரிப் போராட்டம் நடத்தும் பொதுமக்களைக் கைது செய்திருப்பது, யாரைக் காப்பாற்ற, எதை மூடி மறைக்க என்ற கேள்விகளை எழுப்புகிறது.உடனடியாக, மாணவர் முகிலன் மரணம் குறித்த முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணை கோரிப் போராடியதால் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.